கொழும்பு - பொறளை பிரதேசத்தில் தேவாலய வளாகத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தில் காவல்துறை உண்மையை கண்டறிவதற்கான சரியான திசையில் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் சிசிரிவி காணொளிக் காட்சிகளை முழுமையாக பார்வையிடாமல் சில பகுதிகளை மாத்திரம் பார்த்துவிட்டு அதன் அடிப்படையில் சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளதாகவும், இது உண்மையை கண்டறிவதற்கு பதிலாக கதை ஒன்றை சோடிக்கும் முயற்சி எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட பேராயர், குண்டு காலை வேளையிலேயே தேவாலயத்திற்குள் கொண்டுவரப்பட்டதாகவும், சிசிரிவி காணொளிக் காட்சிகளை முழுமையாக பார்த்தால் அதனைப் புரிந்துகொள்ள முடியுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகே, பொரளையில் அமைந்துள்ள சகல புனிதர்கள் தேவாலய வளாகத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் குறித்து, சிசிரிவி காணொளிகளை அடிப்படையாகக் கொண்டு நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேவாலயத்தில் பணியாற்றும் முனி என்பவரே குண்டை வைத்துள்ளதாக சிசிரிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தீர்மானத்திற்கும் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் நாங்களும் சிசிரிவி காட்சிகளை பார்த்தோம். இந்த சந்தர்ப்பத்தில் காலை வேளையில் பதிவான காட்சிகளையும் பார்வையிடுமாறு நாம் கோரினோம். எனினும் காவல்துறையினர் பிற்பகல் வேளையில் அதாவது 3 மணிக்கு பின்னரான காட்சிகள் போதுமென்ற வகையில் அதனை மாத்திரம் பார்த்தனர்.
எனினும் அன்று காலை 9.52இற்கு நபர் ஒருவர் தேவாலயத்திற்குள் நுழைவதை அவதானிக்க முடிகிறது. சுற்றும் அவதானித்தவாறு உள்நுழைகின்றனர். அவர் திருச்சிலுவை இடுகின்றார். எனினும் அவர் அதனை தவறாகச் செய்கின்றார். இதன் மூலம் அவர் கிறிஸ்தவர் அல்ல என்பது தெளிவாகின்றது. அவர் அதன் பின்னர் நிலை அருகே செல்கின்றார். அங்கு ஏதோ செய்கின்றார். அதன் பின்னர் தடுமாறியவாறு வெளியேறுகின்றார். இந்தச் சம்பவம் காலையிலேயே இடம்பெற்றுள்ளது.
எனினும் இதனை காவல்துறையினர் பார்த்திருக்கவில்லை. காவல்துறையினர் ஏன் காலை வேளையில் பதிவான காட்சிகளை பார்க்கவில்லை என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.
Post a Comment