Top News

கமநல அபிவிருத்தித் திணைக்களத்துக்கு திடீர் கண்காணிப்பு விஜயம் செய்த ஜனாதிபதி!




கமத் தொழில் அமைச்சுக்கு சொந்தமான கொழும்பு 07, சேர் மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தையில் அமைந்துள்ள கமநல அபிவிருத்தித் திணைக்களத்துக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ நேற்று திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

விவசாயச் சமூகத்தின் அனைத்து விவசாய நிலங்களின் நிலைபேறான அபிவிருத்தி என்பதை நோக்காகக் கொண்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் செயற்பாடுகளானவை, “விவசாய நிலங்களிலிருந்து உகந்த உற்பத்தித்திறனைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் நிறுவன ரீதியான ஒத்துழைப்பு, சட்ட மற்றும் மேலாண்மை சேவைகளை வழங்குதல், காலத்துக்கு ஏற்ப பராமரிப்பதுமாகும்.

அந்த நோக்கங்கள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்டறிவதே ஜனாதிபதியின் கண்காணிப்பு விஜயத்தின் நோக்கமாகும்.


திணைக்களத்தின் பல தசாப்தகால வரலாற்றில், அரச தலைவர் ஒருவர் விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும்.


கமநல மீளாய்வுச் சபை, விவசாய வங்கி, நிர்வாகம், கணக்கியல், மேம்பாடு, சட்டம், நிறுவன மேம்பாடு, பயனுள்ள சந்தைப்படுத்தல் மற்றும் பொறியியல் நீர் முகாமைத்துவம் ஆகிய அனைத்துப் பிரிவுகளையும் கண்காணித்த ஜனாதிபதி, சுமார் மூன்று மணித்தியாலங்கள் வரை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடி, விவசாய மேம்பாட்டுக்காக எடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் பற்றிக் கேட்டறிந்துகொண்டார்.


பசுமை விவசாயம் மற்றும் நஞ்சற்ற உணவு உற்பத்தியே அரசாங்கத்தின் கொள்கை ஆகும். இம்முறை பெரும் போகத்தில், சேதனப் பசளை விநியோகம், பயன்பாடு மற்றும் விளைச்சல் என்பன தொடர்பில் ஆராய்ந்து, குறைபாடுகளைத் தீர்க்கும் வகையில் சிறு போகத்துக்கு தயாராக வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.


34 அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சேதனப் பசளையை உற்பத்தி செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு நிறுவனத்திலும் சேதனப் பசளையின் மூலம் பெற்ற விளைச்சல் மற்றும் முன்னேற்றம் தொடர்பாக அவதானிக்க வேண்டும்.

Post a Comment

Previous Post Next Post