Top News

மக்கள் விழிப்புடன் இருந்தால் மட்டுமே அவர்கள் தங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க நடவடிக்கை எடுப்பார்கள்



பொருளாதாரம் மேலும் சீரழிவதைத் தடுப்பதற்கு, ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்



கொரோனா வைரஸின் ஒமிக்ரான் மாறுபாடு வேகமாகப் பரவி வருவதாகவும் இதனால் மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களால் வேலைசெய்து பொருளாதாரத்துக்கு பங்களிக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

புதிய மாறுபாட்டின் ஆபத்துகள் மற்றும் பரவலைக் கட்டுப்படுத்த நடைமுறையில் உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நாட்டு மக்களுக்கு தெரிவிக்குமாறு அரசாங்கத்திடம் அவர் கேட்டுக்கொண்டார்.

தொற்றுநோயைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறை மிகவும் கடினமாக உழைத்துள்ளது என்று குறிப்பிட்ட அவர், எனினும் ஒமிக்ரான் மாறுபாட்டுடன் ஐரோப்பா எவ்வாறு போராடுகிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். அங்கு 50 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் ஒமிக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

ஒமிக்ரான் தொற்றால் இறப்பு வீதம் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ள போதும் ஒரு நபர் நோய்வாய்ப்பட்டால், அவர் சிறிது காலம் வேலை செய்ய முடியாது, இது பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறினார்.

தொற்றைக் கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

மக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பதை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். மக்கள் விழிப்புடன் இருந்தால் மட்டுமே அவர்கள் தங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.

Post a Comment

Previous Post Next Post