Top News

மு.கா. விலேயே தொடர்ந்து பயணிப்பேன், தனிக்கூட்டணி அமைக்கப் போவதில்லை - இறைவன் மீது ஆணையிட்டு கூறிக்கொள்கிறேன் - ஹரீஸ்




ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து தனியான முஸ்லிம் கூட்டணியை உருவாக்கத் தீர்மானித்துள்ளனர் என்று தமிழ் முன்னணி இணைய ஊடகம் அடங்களாக சில ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயமானது உண்மைக்கு புறம்பான கற்பனையான செய்தியாகும். இந்த இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தியை முதலில் முன்னணி இணைய ஊடகம் (தமிழ் வின்) ஒன்றே வெளியிட்டிருந்தது அதில் எவ்வித உண்மைகளுமில்லை என்பதை ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் இறைவன் மீது ஆணையிட்டு கூறிக்கொள்கிறேன் என பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.



சில ஊடகங்களில் வெளியாகியுள்ள முஸ்லிம் எம்.பிக்கள் தொடர்பான செய்திகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்து கூறுகையில் நாடுகடந்த புலி ஆதரவாளர்களின் அனுசரணையுடன் நடத்தப்படும் ஊடகமொன்று தமிழ் கட்சிகள் வடகிழக்கு இணைப்பை உறுதிப்படுத்தும் 13ம் திருத்தம் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை செய்துவரும் இந்நிலையில் அதற்கு எதிராக வடக்கு கிழக்கை சேர்ந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே இந்த ஒப்பந்தத்தை செய்யவிடாமல் தடுத்துவிடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக முஸ்லிம் மக்களை திசைதிருப்பும் நோக்கிலும், இந்த முஸ்லிம் எம்.பிக்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்துவதற்காகவும் இவ்வாறான செய்தியை வெளியிட்டு மக்களை குழப்புகின்றனர்.

புதிய கூட்டணி அமைப்பது பற்றியோ அல்லது மொட்டுடன் கூட்டணியை அமைத்து இணைவது தொடர்பிலோ, அரசாங்கத்தில் நேரடியாக இணைந்து அமைச்சர் பதவிகள் பெறுவது பற்றியோ கற்பனையில் கூட நாங்கள் நினைக்கவில்லை. இது தொடர்பில் நாங்கள் எவ்வித பேச்சுவார்த்தைகளையோ, ஆலோசனைகளையோ, நடவடிக்கைகளையோ எடுக்கவில்லை என்பதை இந்த சந்தர்ப்பத்தில் பொறுப்புடன் கூறிவைக்க விரும்புகிறேன். மக்களின் நலனுக்காக ஒன்றிணைந்து செயற்பட்டு வரும் நாங்கள் உரிமைசார்ந்த விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றத்திலும், பாராளுமன்றத்திற்கு வெளியே ஊடகங்களிலும், பொதுநிகழ்வுகளிலும் குரல்கொடுத்து எங்களின் சமூக உணர்வை நிரூபித்து வரும் இந்த சூழ்நிலையில் அவர்களின் தந்திரோபாய அரசியல் முன்னெடுப்பாக எங்களின் மீது சந்தேகங்கொள்ள செய்யும் வகையில் கற்பனையில் புனையப்பட்ட கதையை வெளியிட்டுள்ளனர்.

நான் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலையே பயணிப்பதில் உறுதியாக இருக்கிறேன். ஏனைய சக பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்களுடைய கட்சிகளில் பயணிப்பதில் உறுதியாக இருக்கிறார்கள் என்று நம்புகிறேன். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பலப்படுத்தி சமூக விடயங்களில் தொடர்ந்தும் கரிசனையுடன் செயற்படுவதில் உறுதியாக இருக்கும் நான் இவ்வாறான போலியான செய்திகளை பற்றி அலட்டிக்கொள்ளப்போவதில்லை என்றார்.

Post a Comment

Previous Post Next Post