(எம்.மனோசித்ரா)
அரசாங்கத்திற்கு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லவும், நாட்டை நிர்வகிக்கவும், அபிவிருத்தி செய்யவும் முடியாது என்பதை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர். எனினும் எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டத்தை நாம் இப்போதிலிருந்தே ஆரம்பித்துள்ளோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கொலன்னாவ தேர்தல் தொகுதியின் வாக்களிப்பு நிலையங்களின் தலைவர்கள் நியமனம் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போதைய அரசாங்கத்திற்கு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லவும், நாட்டை நிர்வகிக்கவும், அபிவிருத்தி செய்யவும் முடியாது என்பதை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர்.
பொருளாதார வளர்ச்சி வேகத்தினை அதிகரித்தால் நாட்டில் காணப்படும் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வினைக் காண முடியும். பொருளாதார வளர்ச்சி வேகத்தினை அதிகரிப்பதற்கு டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி நகர வேண்டும்.
நாம் பாடசாலை மட்டத்திலிருந்து இதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். தேசிய கொள்கையொன்றின் மூலமாகவே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும்.
எனினும் தற்போது போலியான பிரசாங்களை முன்னெடுத்து மக்களை ஏமாற்றும் செயற்பாடுகளில் ஒரு சில தரப்பினர் ஈடுபட்டுள்ளர். அவற்றுக்கு மக்கள் ஏமாந்து விடக் கூடாது.
இலங்கை வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு வேலைத்திட்டத்தினை முன்வைத்து அதனை, யாரும் நடைமுறைப்படுத்தவுமில்லை. ஆனால் முதன்முறையாக ஐக்கிய மக்கள் சக்தி அதனை செய்து வருகிறது.
எம்மைப் போன்று இவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஏனைய தரப்பினருக்கு சவால் விடுக்கின்றோம்.
மக்கள் தற்போது எதிர்பார்த்துள்ள பிரச்சினைகளுக்கான தீர்வினை எம்மால் வழங்க முடியும். அரசாங்கம் என்பது மக்களை வாழ வைப்பதற்கேயாகும். ஆனால் இந்த அரசாங்கம் மக்களை கொல்லும் அரசாங்கமாகவுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் உயிரிழந்த மக்களின் சடலங்களைக் கொண்டு ஆட்சியைக் கைப்பற்றிய அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையில் எந்தவொரு தீர்வினையும் வழங்கவில்லை.
அரசாங்கம் என்பது நிர்வாகம் மாத்திரமல்ல. அது சேவையாகும். இவ்வாறு சேவையாற்றும் போது கிடைக்கப் பெறும் பாராட்டுக்களைப் போலவே, விமர்சனங்களையும் அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
Visit web
Post a Comment