பசில் ராஜபக்ஸ ஒரு அமெரிக்க பிரஜையாக அந்நாட்டின் பாதுகாப்பிற்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு நாட்டிற்கு எதிராகவும் ஆயுதமேந்தி செயற்பட தயார் என சத்தியப்பிரமாணம் செய்துள்ள நிலையில், இலங்கையின் அரசியலமைப்பை பாதுகாப்பதாக எவ்வாறு சத்தியப்பிரமாணம் செய்ய முடியும் என ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஸ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பினார்.
பசில் ராஜபக்ஸ பாராளுமன்ற உறுப்பினராகவும் நிதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டமை, சத்தியப்பிரமாணம் செய்தமை மற்றும் அப்பதவிகளில் செயற்படுகின்றமையை செல்லுபடியற்றதாக்கி உத்தரவு பிறப்பிக்குமாறு உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்துள்ள எழுத்தாணை மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி சட்டத்தரணி இதனை கூறினார்.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக்க கனேபொல ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பசில் ராஜபக்ஸ அமெரிக்க பிரஜையாக இருந்துகொண்டு அமெரிக்காவின் நலனுக்காக இலங்கையுடன் உடன்படிக்கைகளை ஏற்படுத்திக்கொள்ள செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஸ, அதன் பாதகமான தாக்கங்களை நாட்டு மக்கள் அனைவரும் அனுபவிக்க நேரிட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
நள்ளிரவு வேளையில் இரகசியமான முறையில் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையூடாக அமெரிக்காவிலுள்ள நிறுவனம் ஒன்றுக்கு யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகள் வழங்கப்பட்டமை அண்மைய உதாரணமாக அமைந்துள்ளதென ஜனாதிபதி சட்டத்தரணி கூறியுள்ளார்.
பசில் ராஜபக்ஸவின் நியமனம் அன்றி அந்த பதவியில் அவர் செயற்படுவதை ஆட்சேபித்தே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி கூறினார்.
வேறொரு நாட்டின் அரசியலமைப்பின் கீழ் சத்தியப்பரமாணம் செய்துள்ள முதலாவது பிரதிவாதியான பசில் ராஜபக்ஸ, நிதி அமைச்சராக அன்றி பொதுவான அலுவலகம் ஒன்றின் அலுவலக உதவியாளராக செயற்படுவது கூட சட்டத்திற்கு முரணானது என விஜயதாச ராஜபக்ஸ கூறினார்.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இல்லாததால், மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே தள்ளுபடி செய்யுமாறு சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரில் புள்ளே இதன்போது தெரிவித்தார்.
விடயங்களை கவனத்திற்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம், மனுவுடன் தொடர்புடைய அறிவித்தலை பிரதிவாதியான பசில் ராஜபக்ஸவிற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்குமாறு முறைப்பாட்டாளர் தரப்பிற்கு உத்தரவிட்டது.
இந்த மனு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
உலப்பனே சுமங்கல தேரர், பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னாள் செயலாளர் லெசில் டி சில்வா மற்றும் சட்டத்தரணி சுராஜ் வல்கம ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
அமைச்சர் பசில் ராஜபக்ஸ, பாராளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
Post a Comment