அஹ்னாப் ஜசீமுக்கு பிணை வழங்கிய அதே நீதிமன்றம் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு பிணை வழங்க மறுத்தது ஏன்? - கேள்வி எழுப்பியுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை
January 29, 2022
0
(நா.தனுஜா)
அஹ்னாப் ஜசீமுக்கு பிணை வழங்கிய அதே புத்தளம் மேல் நீதிமன்றம், பிணை வழங்குவது தமது அதிகார வரம்பிற்கு உட்பட்டதல்ல எனக்கூறி சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கான பிணைக் கோரிக்கையை நிராகரித்திருக்கின்றது என சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
அத்தோடு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பிணை வழங்கல் என்பது குழப்பங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் உரியதாகக் காணப்படுவது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடைய விசாரணைகளுக்காகக் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு எதிரான சாட்சி விசாரணைகள் புத்தளம் மேல் நீதிமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன் வழக்கு விசாரணையைத் தொடர்ந்து அவர் சார்பில் பிணை கோரி வாதங்கள் முன்வைக்கப்படும் பட்சத்தில், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் ஏற்கனவே தீர்மானித்திருந்தது.
இந்நிலையில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்குப் பிணை வழங்குவது தமது அதிகார வரம்பிற்கு உட்பட்டதல்ல என்பதால், அவருக்கான பிணை உத்தரவை நிராகரித்த புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கான பிணைக் கோரிக்கையை முன்வைக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் 'மனசாட்சியின் கைதியாக' இருக்கக்கூடிய ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) பிணை வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக ஏற்கனவே சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்திருந்தது.
'சுமார் 21 மாதங்களின் பின்னர் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா அவரது குடும்பத்தினருடன் இணையப் போகின்றார். ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கைது செய்யப்பட்டமையை நியாயப்படுத்தக் கூடிய வகையில், அவர் தவறிழைத்தார் என்பதை நிரூபிப்பதற்கான எந்தவொரு ஆதாரமும் அதிகாரிகளால் தற்போதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை' என்றும் மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியிருந்தது.
எனினும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கான பிணைக் கோரிக்கை புத்தளம் மேல் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அது குறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியப் பிராந்திய செயற்பாட்டாளர் த்யாகி ருவன்பத்திரண,
'அஹ்னாப் ஜஸீமுக்கு பிணை வழங்கிய அதே நீதிமன்றம், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மறுதலிக்கப்படாத போதிலும் பிணை வழங்குவது தமது அதிகார வரம்பிற்கு உட்பட்டதல்ல எனக்கூறி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கான பிணைக் கோரிக்கையை நிராகரித்திருக்கின்றது' என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு இதற்கு சட்டத்தின் ஊடாக அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையிலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பிணை வழங்கல் என்பது குழப்பங்களுக்கும் சர்ச்சைக்களுக்கும் உரியதாகக் காணப்படுவது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share to other apps