Top News

இலங்கையருக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிக்குமாறு தென் கொரிய சபாநாயகரிடம் பிரதமர் கோரிக்கை



இலங்கைக்கென ஒதுக்கப்பட்டுள்ள தொழில் வாய்ப்புகளை அதிகரிப்பது குறித்து பரிசீலிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தென் கொரியாவிடம் கோரிக்கை விடுத்தார்.


தென் கொரிய சபாநாயகர் பார்க் பெங்க் செக் மற்றும் பிரதமருக்கிடையிலான சந்திப்பு (20) அலரி மாளிகையில் இடம்பெற்றபோதே பிரதமர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.


தென் கொரிய சபாநாயகர் ஒருவர் இந்நாட்டிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருப்பது பத்து வருடங்களுக்கு பின்னராகும்.


பிரதமரின் கோரிக்கைக்கு சாதகமான பதில் வழங்கிய சபாநாயகர் பார்க் பெங்க் செக், 'இளம், திறமையான இலங்கை பணியாளர்கள் எமது இரு நாட்டின் வருவாய் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்வது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்' எனக் குறிப்பிட்டார்.


வெளிவிவகார அமைச்சின் கூற்றுப்படி, தென் கொரியாவில் தற்போது சுமார் 22,000 இலங்கை தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 2019 இல், அவர்கள் இலங்கைக்கு சுமார் 520 மில்லியன் டொலர்களை அனுப்பியுள்ளனர்.


தென் கொரியாவிலுள்ள இலங்கைப் பணியாளர்கள் அனுப்பும் பணம் மொத்த அந்நிய செலாவணியில் 7.75 வீதம் ஆகும், இது இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.62 வீதத்திற்கு சமமாகும்.


2019 ஆம் ஆண்டில், தென் கொரியா இலங்கையருக்கு என 3,600 தொழில் வாய்ப்புகளை ஒதுக்கியிருந்தது. இருப்பினும், கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக, அந்த எண்ணிக்கை 2020 இல் 500 ஆகக் குறைந்தது. அது தொடக்கம் இதுவரை சுமார் 400 இலங்கையர்கள் தென் கொரியாவில் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளதுடன் அவர்கள் அங்கு செல்வதற்கு எதிர்பார்த்துள்ளனர்.


20 மாதங்களுக்குப் பிறகு, 33 இலங்கைத் தொழிலாளர்களைக் கொண்ட முதல் தொகுதி கடந்த மாதம் தென் கொரியாவை சென்றடைந்தது.


இலங்கையிலுள்ள தென் கொரிய சமூகத்திற்கு கொவிட்19 நோய்த்தடுப்பு மருந்தை வழங்குவதற்கும், உயர்தர பாடத்திட்டத்தில் கொரிய மொழியை சர்வதேச மொழியாக சேர்ப்பதற்கும் வழங்கிய ஆதரவிற்காக தென் கொரிய சபாநாயகர் பார்க் பெங்-செக், பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.


இலங்கையின் உயர் திறன்மிக்க மனிதவளம் மற்றும் சிறந்த தகவல் தொழில்நுட்பத் திறன்கள் மிக்க தொழில் படை குறித்து தென் கொரிய சபாநாயகரிடம் இலங்கைப் பிரதிநிதிகள் விளக்கமளித்ததுடன், தொழில் பயிற்சி திட்டங்களுக்கு ஒத்துழைக்குமாறும் தென்கொரியாவிடம் கோரினர்.


ஆங்கில அறிவுடைய இலங்கையின் இளம் பணியாளர்களுக்கு தென் கொரியாவில் தொழில்நுட்ப திறன்களுடன் கல்வி மற்றும் தொழில் பயிற்சித் துறைகளில் ஒத்துழைப்பை வழங்க முடியும் என்று சபாநாயகர் பார்க் பெங்க்-செக் சாதகமாக பதிலளித்தார்.

Post a Comment

Previous Post Next Post