Top News

ஞானசார தேரரைச் சந்தித்த முஸாரப் எம்.பி "ஒரே நாடு. ஒரே சட்டம்" செயலணிக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்தார்.




"ஒரே நாடு. ஒரே சட்டம்" ஜனாதிபதி செயலணிக்கும், பாராளுமன்ற உறுப்பினர் SMM முஷாரப் அவர்களின் குழுவுக்கும் இடையான சந்திப்பு நேற்று (04.01.2022) இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் போது, "ஒரே நாடு. ஒரே சட்டம்" ஜனாதிபதி செயலணியின் தலைவர் ஞானசார தேரர், செயலணியின் செயலாளரும் ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பாளருமாகிய ஜீவன்தி சேனாநாயக்க மற்றும் செயலணியின் அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர். அத்தோடு பொத்துவில் தொல்லியல் இடங்கள் தொடர்பான பிரச்சினைகள் பற்றிய விடயங்களை

 முன்வைப்பதற்காக பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் MH அப்துல் றஹீம் மற்றும் பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் MS முபாரக் ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினருடன் இணைந்து கொண்டனர்.

இச்சந்திப்பில், "ஒரே நாடு. ஒரே சட்டம்" என்ற கோசம் மூலம் தொடரப்படும் சட்டங்கள் நாட்டை ஒருங்கிணைப்பதாக இருக்க வேண்டும். மாறாக, எந்த இனத்தையோ சமூகத்தையோ பிளவுபடுத்துவதாக அமையக்கூடாது என்பதையும், தொல்லியல் இடங்கள் பாதுகாக்கப்படும் போது, அனைத்து இனங்களுக்குமான தொல்லியல் இடங்கள் பாதுகாக்கப்படுவதோடு, தொல்லியல் ஆராய்ச்சிக்காக தேர்ச்சி பெற்ற சகல இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளுமைகள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதையும் செயலணியிடம் பாராளுமன்ற உறுப்பினர் SMM முஷாரப் அவர்கள் வலியுறுத்தினார்.

மேலும், பொத்துவிலில் பல்லாண்டு காலமாக பிரச்சினையாக நிலவிவருகின்ற பொத்துவில் மண்மலை முகுது மகா விகாரை தொல்லிடம் தொடர்பான யதார்த்தங்களையும் உண்மைகளையும் மக்கள் சார்பான விடயங்களையும் செயலணியிடம் முன்வைத்தார்.
 
முன்வைக்கப்பட்ட யதார்த்தங்களையும் உண்மைகளையும் கலந்து கொண்டிருந்த செயலணியின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் புரிந்து கொண்டதோடு, இதற்கான சிறந்ததொரு தீர்வைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்து, இந்தப் பிரச்சினை தொடர்பான தீர்க்கமான முடிவை எட்டுவதற்காக இதனுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் திணைக்கள அதிகாரிகளையும் குறி்ப்பாக தொல்லியல் ஆராய்ச்சி திணைக்களம், நில அளவையாளர் திணைக்களம் மற்றும் செயலணி ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள் கலந்து கொள்ளும் கூட்டமொன்றை எதிர்வரும் 10ஆம் திகதி ஜனவரி 2022 திகதி நடத்த ஏற்பாடு செய்தனர்.
பல்லாண்டு காலமாக தீர்க்கப்படாத மக்கள் பிரச்சினைகளை வேகமாக தீர்ப்பதற்காக அக்கறை காட்டும் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பாளருக்கும் செயலணியின் அதிகாரிகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Post a Comment

Previous Post Next Post