Top News

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயலிழந்த மின்பிறப்பாக்கி சீர் செய்யப்பட்டது : மின் வெட்டு அமுல்படுத்துவது தொடர்பில் இன்று மீளாய்வு




நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்தின் செயலிழந்த மின் பிறப்பாக்கி சீர் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் அன்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், குறித்த மின் பிறப்பாக்கி சீர்செய்யப்பட்டு தற்போது 160 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


900 மெகாவோட் உற்பத்தி செய்யும் குறித்த மின் உற்பத்தி நிலையத்தின் 300 மெகாவோட் மின்சாரத்தை வழங்கும் மின் பிறப்பாக்கி கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் திகதி செயலிழந்தமை குறிப்பிடத்தக்கது.


இதேவேளை, தேவையான எரிபொருள் இன்மை காரணமாக மின் வெட்டை அமுல்படுத்துவது தொடர்பில் கடந்த வியாழக்கிழமை (27) இறுதியாக மேற்கொள்ளப்பட்ட மீளாய்வுக்கு அமைய இன்று (31) வரை மின் வெட்டு அமுல்படுத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.


இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் (PUCSL) எடுக்கப்பட்ட குறித்த தீர்மானத்திற்கு அமைய, இன்றையதினம் மீண்டும் மீளாய்வு நடாத்தப்படவுள்ளதாக, அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதனைத் தொடர்ந்து நாட்டில் திட்டமிட்ட வகையிலான மின் வெட்டை அமுல்படுத்துவது தொடர்பில் இன்று பிற்பகல் அறிவிக்கப்பட உறுதியான அறிக்கை வெளியிடப்படும் என அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார்.


இதேவேளை, தற்போதைய நெருக்கடியான சூழ்நிலைமையினை முகாமைத்துவம் செய்ய தனியார் நிறுவனங்களிடமிருந்து தற்காலிகமாக மின்சாரத்தை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளோம். அதற்கான யோசனையை இன்று திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளேன் என மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post