Top News

ஊழல் அற்ற ஆட்சியே எங்கள் இலக்கு’ – சஜித்



அரசுக்கு நாட்டை இராணுவ ஆட்சிக்குக் கொண்டு செல்வது தொடர்பான எண்ணம் இருக்கும் என நான் எண்ணவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.




வவுனியா ஊடக அமையத்தில் இன்று ) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,




” ஐக்கிய மக்கள் சக்தி என்பது நாட்டில் இதுவரை இல்லாத பொது அரசியல் அத்தியாயத்தை முன்னெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு. அரசியல் கலாச்சாரத்தை இல்லாமல் செய்து நாட்டின் எதிர்காலத்திற்கும், நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்குமான அமைப்பு தான் இது. இது தனி நபருக்கானதோ அல்லது ஒரு இனத்திற்கானதோ அல்ல.




நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல விரும்புபவர்கள் அனைவரும் இணைந்து பயணிக்கின்றார்கள். ஊழல், கொள்ளைகள் இல்லாத ஒரு அரசாங்கத்தை உருவாக்குவது எமது நோக்கம். மத்திய வங்கி கொள்ளையில் ஈடுபடடவர்கள் எவ்வாறு எம்மோடு இணைய வருவார்கள்.




சுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்கிய விடயமானது, தலைவலிக்குத் தலையணையை மாற்றுவது போன்ற வேலை. மக்கள் இந்த அரசாங்கத்திற்குக் கொடுத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தவில்லை. முழுவதும் கண்துடைப்பாகச் செய்கிறார்கள். இதனை மாற்ற வேண்டும். இதற்கு புதிய மக்கள் சக்தியை உருவாக்க வேண்டும்.




அதற்கான வாய்ப்பை மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். வடக்கு, கிழக்கில் எம்மால் கடந்த அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத் திட்டமானது மக்களின் பங்களிப்புடன் கூடியதாகவே ஆரம்பிக்கப்பட்டது. இதனை நாம் நடைமுறைப்படுத்தினோம்.




தற்போதைய அரசாங்கம் கொள்ளையடிப்பதில் தான் குறியாக இருக்கிறார்கள். இதனால் மக்களுக்கு எப்படி வீட்டுத் திட்டத்தை அவர்களால் வழங்க முடியும். நாம் இந்த நாட்டின் ஜனாதிபதியாகி இந்த மக்களின் வீட்டுத் திட்டப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை வழங்குவேன் என உறுதியளிக்கின்றேன்.




ஊடகம் என்பது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக இருக்கும் மிகப்பெரிய சக்தி என நான் நம்புகின்றேன். மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்துவது ஊடகவியலாளரின் கடமை. இவ்வாறு உண்மைகளை வெளிப்படுத்திய ஊடகவியலாளர்கள் பலர் இன்னல்களை எதிர்நோக்கியுள்ளார்கள்.




அவ்வாறு பாதிப்படைந்த அல்லது உயிரிழந்த ஊடகவியலாளர்களுக்கு நாம் ஆட்சிக்கு வந்ததும் அரசாங்கம் என்ற வகையில் எம்மால் முடிந்த சலுகைகளைப் பெற்றுக் கொடுப்போம். ஐக்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாட்டிற்கான பயணம் தொடர்கிறது.




இந்த பயணத்தில் வடக்கு அரசியல், தெற்கு அரசியல் என்று இல்லை. இதில் எந்த வித பிரிவினைகளும் கிடையாது. இலங்கை என்பது ஒரு நாடு. நாம் அதன் பிரஜைகள் என்ற அடிப்படையில் தான் பணியாற்றுவோம்.




மக்களது பிரச்சனைகளை நாம் கட்டம் கட்டமாகச் செய்வோம். இதில் எந்தவித வேறுபாடும் கிடையாது. இராணுவ வழிநடத்தல் அல்லது இராணுவத்தின் தலைமைத்துவம் என்பது இராணுவத்திற்குத் தான் பொருத்தம். எமது நாடு ஜனநாயக நாடு.




ஜனநாயக நாட்டை வழிநடத்துவதற்கும், கொண்டு செல்வதற்கும் தேவையானது ஜனநாயக ரீதியிலான தேர்தலும், மக்களது வாக்குகளும், அதன் மூலம் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் தான். நாட்டின் ஆட்சியில் இராணுவ வழிநடத்தல் என்பது தேவையில்லாதது. இது சம்மந்தமாக என்னிடம் மேலதிகமாக கேட்க வேண்டாம். ” – என்றார்.

Post a Comment

Previous Post Next Post