மரத் தளபாடங்கள் இறக்குமதி என்ற பெயரில் 10 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்கு இறக்குமதி செய்துள்ள இரண்டு நபர்களுக்கு எதிராக நான்கு வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வர்த்தகர்கள் இருவரும் 420 இலட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகளை இவ்வாறு இறக்குமதி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
நாட்டில் நடைமுறையிலுள்ள புகையிலை சட்டத்துக்கிணங்க குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக தீர்ப்பிடப்பட்டிருந்த மேற்படி இரண்டு வர்த்தகர்களுக்கும் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனையை வழங்கி கொழும்பு மேலதிக நீதவான் துலானி அமரசிங்க தீர்ப்பளித்துள்ளார்.
சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக குற்றவாளிகள் இருவருக்குமாக 50 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதித்துள்ள நீதவான் தண்டப்பணம் செலுத்தத் தவறினால் மேலும் 6 மாத கால சிறைத் தண்டனை வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
இரண்டு குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளதுடன் முதலாவது குற்றத்திற்காக மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனையும் அதேபோன்று இரண்டாவது குற்றத்துக்காக ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளதுடன் ஒருவருக்கு 25,000 ரூபா என்ற வீதத்தில் தண்டப் பணத்தை அறவிட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் உதவி சுங்க அத்தியட்சகர் டீ.ஏ.எம்.ஆர்.சாகர ரணசிங்க நீதிமன்றத்தில் முறைப்பாட்டை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
லோரன்ஸ் செல்வநாயகம்
Post a Comment