Top News

மொனராகலையில் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் : குற்றவாளிக்கு 15 வருட கால கடூழிய சிறைத் தண்டனையுடன், அபராதம்



மொனராகலையில், சிறுமியொருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஒருவருக்கு, மேல் நீதிமன்ற நீதிபதியினால், 15 வருட கால கடூழிய சிறைத் தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மூன்று இலட்ச ரூபா இழப்பீடும், பத்தாயிரம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


மொனராகலை மேல் நீதிமன்றத்தில் இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, நீதிபதி நதி அபர்னா சுவதுருகொட, குற்றம் புரிந்த நபரான நவசிரிபுர பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய குமார பிரேமச்சந்திரவிற்கு மேற்படி தண்டனைகளை வழங்கினார்.


கடந்த 2011 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 14 ஆம் திகதி மேற்படி சம்பவம், சிறுமியின் வீட்டில் இடம்பெற்றுள்ளது.


சிறுமியின் பெற்றோர் தனமல்விலைப் பொலிசாருக்கு வழங்கிய தகவலின்படி, குறிப்பிட்ட நபர் கைது செய்யப்பட்டு, நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதையடுத்து இந்த வழக்கு, மொனராகலை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.


நீண்ட வழக்கு விசாரணைகளில், சந்தேக நபர் குற்றம் புரிந்தமை ஊர்ஜிதமாகியது. பின்னர் நீதிபதி குற்றம் புரிந்த நபருக்கு 15 வருட கால கடூழியச் சிறைத் தண்டனையை வழங்கியதுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மூன்று இலட்சம் ரூபா இழப்பீட்டினையும், அபராதமாக பத்தாயிரம் ரூபாவையும் வழங்குமாறும் உத்தரவிட்டார்.


இழப்பீடு வழங்கத்தவறின் கடூழியச் சிறைத்தண்டனை மேலும் இரு வருடங்களுக்கு நீடிக்குமெனவும் நீதிபதி குறிப்பிட்டார். வழக்காளி தரப்பில் அரச சட்டத்தரணி ரூவிந்து பெர்ணந்து, நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post