Top News

அரசாங்கம் அடுத்த மாதம் 515 மில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனை செலுத்த வேண்டியுள்ளது - ஹர்ஷ டிசில்வா



(எம்.ஆர்.எம்.வசீம்)


நாட்டின் வெளிநாட்டு செலாவணி எதிர்வரும் மூன்று வாரங்களுக்கு மாத்திரம் போதுமாக இருக்கும் நிலையில் இலங்கை அரசாங்கம் அடுத்த மாதம் 515 மில்லியன் டொலர் வெளிநாட்டு கடன் செலுத்த வேண்டி இருக்கின்றது என ஹர்ஷடி சில்வா தெரிவித்தார்.


நாட்டில் கையிருப்பில் இருக்கும் வெளிநாட்டு செலாவணி தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.


இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதாரம் நாளுக்குநாள் வீழ்ச்சியடைந்து செல்வதை காண்கின்றோம். இதனை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டம் எதுவும் இல்லை என்றே எமக்கு விளங்குகின்றது. ஏனெனில் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முறையான எந்த வேலைத்திட்டத்தையும் அரசாங்கம் இன்னும் முன்வைக்கவில்லை.


அத்துடன் இலங்கை அரசாங்கம் செலுத்த வேண்டிய வெளிநாட்டு கடன்களை மறுசீரமைப்பு செய்துகொள்ள வேண்டும். அதற்காக சம்பந்தப்பட்ட நாடுகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும்.


அடுத்த மாதமாகும்போது 515 மில்லியன் டொலர் வெளிநாட்டு கடன் செலுத்த வேண்டி இருக்கின்றது. இந்த கடன் தொகையானது கடந்த மாதம் செலுத்த வேண்டி இருந்ததாகும். என்றாலும் அதனை செலுத்த இந்திய அரசாங்கம் நிவாரண காலம் ஒன்றை வழங்கி இருந்தது. அதன் பிரகாரம் அடுத்த மாதம் இந்த கடன் தொகையை வழங்க வேண்டி இருக்கின்றது.


மேலும் வெளிநாட்டு கடன் செலுத்துவதற்கு டொலர் தேவை. நாட்டின் தற்போதுள்ள வெளிநாட்டு கையிருப்பானது, மத்திய வங்கி தெரிவிப்பதைவிட குறைவாகும்.


டொலர் தொகையை அடிப்படையாகக் கொண்டே கையிருப்பில் இருக்கும் தொகை கணிக்கப்படுகின்றது. ஆனால் அரசாங்கத்துக்கு கிடைக்கப் பெற்ற யூராே நாணயங்களையும் சேர்த்தே 1.2 பில்லியன் டொலர் கையிருப்பில் இருப்பதாக அரசாங்கம் மக்களை ஏமாற்றி வருகின்றது.


ஆனால் தற்போது அரசாங்கத்திடம் வெளிநாட்டு செலாவணி 700 அமெரிக்க டொலர் மில்லியனாகும். இந்த தொகையானது, நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களை எதிர்வரும் இரண்டு அல்லது 3 வாரங்களுக்கே இறக்குதி செய்வதற்கே போதுமானது.


நாட்டின் வெளிநாட்டு செலாவணி இந்தளவு குறைவடைந்திருப்பது வரலாற்றில் முதல் தடவையாகும். அதனால் அடுத்த மாதம் 515 மில்லியன் டொலர் வெளிநாட்டு கடன் செலுத்துவது பாரிய பிரச்சினையாகும் என்றார்.

Post a Comment

Previous Post Next Post