Top News

வடக்கு ஆளுநருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்




யாழ். தீவகப் பெண்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ள கருத்து மிகுந்த மன வேதனையைத் தந்துள்ளது எனச் சுட்டிக்காட்டி வேலணை பிரதேச சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று தவிசாளர் கருணகரகுருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, பிரதேச சபை உறுப்பினர் மேரி மரில்டா ஆளுநர் தெரிவித்ததாக வெளியான செய்தியைச் சுட்டிக்காட்டி கண்டனத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்திருந்தார்.

அதனைச் சபையின் அனைத்து உறுப்பினர்களாலும் ஆளுநரது குறித்த விடயம் கண்டிக்கப்பட்டதுடன் அதற்கு அவர் மன்னிப்புத் தெரிவித்து செய்தி வெளியிட வேண்டும் என்ற தீர்மானத்தையும் ஏகமனதாக நிறைவேற்றி அதை ஆளுநருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறும் தீர்மானித்திருந்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், யாழ். தீவகப் பகுதிகளில் சில இடங்களில் பெண்கள் சமூகத்துக்கு விரோதமான நடத்தைகளுக்குத் தள்ளப்படுவது மிகவும் வருத்தமளிக்கும் நிலையில், அவ்வாறான பெண்களுக்கு உதவுவதற்குத் தயாராக இருப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.

குறித்த செய்திக்கு எதிராகவே வேலணை பிரதேச சபையில் இன்று கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. (K)

Post a Comment

Previous Post Next Post