Top News

சுதந்திர கட்சியின் செயற்பாடுகள் குறித்து எந்நிலையிலும் அவதானத்துடன் உள்ளோம் - எஸ்.எம். சந்திரசேன




(இராஜதுரை ஹஷான்)


ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் செயற்பாடுகள் குறித்து எந்நிலையிலும் அவதானத்துடன் செயற்படுவோம். எதிர்வரும் காலங்களில் சுதந்திர கட்சி அரசியல் ரீதியில் தனித்து தீர்மானங்களை முன்னெடுக்கலாம் என காணி விவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.


அநுராதபுரம் நகரில் வியாழக்கிழமை (3) இடம்பெற்ற 'ஒரு இலட்ச அபிவிருத்தி' ஆரம்ப நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் குறிப்பிடுகையில், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தில் தலைவர் பதவியை வகிக்காததை போன்று கருத்துரைத்துக் கொள்கிறார்.


நல்லாட்சி அரசாங்கம் சிறந்த முறையில் நாட்டை நிர்வகித்திருந்தால் பொதுமக்கள் ஏன் 2019 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள் என்பதை அவர் விளங்கிக் கொள்ள வேண்டும்.


சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்துகொண்டு அரசாங்கத்தின் கொள்கையினை தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார்கள்.


பொறுப்பு வழங்கப்பட்டுள்ள சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் கொள்கை திட்டத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவார்கள் என்பது சந்தேகத்திற்குரியது.


சுதந்திர கட்சி உறுப்பினர்களது செயற்பாடு குறித்து எந்நிலையிலும் அவதானத்துடன் உள்ளோம். எதிர்வரும் காலங்களில் சுதந்திர கட்சி அரசியல் ரீதியில் தனித்து தீர்மானங்களை எடுப்பார்கள். அரசியல் ரீதியில் தீர்மானம் எடுக்கும் உரிமை ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும் உண்டு.


சுபீட்சமான இலக்கு கொள்கை திட்டத்தினை முழுமைப்படுத்த அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. ஒரு இலட்சம் அபிவிருத்தி செயற்திட்டம் இவ்வருடத்திற்குள் பூரணப்படுத்தப்படும். நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றார்.

Post a Comment

Previous Post Next Post