Top News

இந்தியப் பிரதமர் மோடிக்கு இலங்கை அரசாங்கம் அழைப்பு



அடுத்த மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், மியன்மார் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கும் மார்ச் 31ஆம் திகதி உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ டிசெம்பரில் இந்தியாவுக்கு விஜயம் செய்து,
கலந்துரையாடியதன் விளைவாக இந்தியா 2.4 பில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரங்களுக்குள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மீண்டும் இந்தியாவுக்கு விஜயம் செய்து உரிய உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதற்கும் அதற்கான நிதியை உடனடியாக பெற்றுக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்திய அமைச்சரின் அழைப்பின் பேரில் தாம் உத்தியோகபூர்வ விஜயமொன்றை இந்தியாவிற்கு மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கரும் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான அழைப்பை ஏற்றுக்கொண்டதாகவும், மார்ச் 18 முதல் 20 வரையான நாள்களில் அவர் இலங்கைக்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை தொடர்பான எழுத்துமூல அறிக்கை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்செலட்டினால் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த அறிக்கை மார்ச் 3 ஆம் திகதி விவாதிக்கப்படும். இந்த அறிக்கையின் பிரதியை வெளிவிவகார அமைச்சுக்கு வழங்குவதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஐந்து நாட்களுக்குள் இலங்கை பதில் அளிக்க வேண்டும் என்றும், உரிய பதில்கள் கவனமாக தொகுக்கப்பட்டு பெப்ரவரி 19 ஆம் திகதி ஜெனிவாவுக்கு அனுப்பப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Post a Comment

Previous Post Next Post