Top News

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்கக்கோரி கையெழுத்து சேகரிக்கும் நிகழ்வில் மக்கள் காங்கிரஸ் கட்சி பங்கேற்பு!


தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் ஏற்பாட்டில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்கக்கோரும் கையெழுத்துச் சேகரிக்கும் நிகழ்விலும், அதுதொடர்பான கவனயீர்ப்பு போராட்டமும்  நேற்று (27) மட்டக்களப்பு, காந்திப்பூங்கா சதுக்கத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக கட்சியின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும்மான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்துகொண்டு, கையொப்பம் இட்டு தனது கருத்துக்களையும் தெரிவித்தார்.


"சிறுபான்மை இனங்களை இலக்கு வைத்தும், அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களைக் கொண்டவர்களைப் பழி வாங்கும் நோக்கிலும் இச்சட்டம் பயன்படுத்தப்பட்டு வருவதால், இப்பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என்பதே எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடாகும். எனவே, இந்நாட்டிலுள்ள முற்போக்கு சக்திகளுடன் இணைந்து இப்போராட்டத்திற்கு எமது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் தமது பூரண பங்களிப்பை வழங்கத் தீர்மானித்துள்ளது." என்று அவர் தெரிவித்தார்.


மேற்படி நிகழ்வில், ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹஸன் அலி, மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மட்டக்களப்பு மறை.மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கம், கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம், இந்து, இஸ்லாமிய மதத்தலைவர்கள், தமிழ்-முஸ்லிம் மக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post