Top News

தமிழ் மக்களை மறக்கமாட்டேன்! - யாழில் மைத்திரி


வடக்கு மாகாணத் தமிழ் மக்களுக்கு எனது நன்றிக் கடன் என்றும் இருக்கும் என்றும், அவர்களை ஒருபோதும் மறக்கமாட்டேன் என்றும் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

யாழ்., வடமராட்சி, உடுப்பிட்டியில் நேற்று (20) மாலை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"இந்த மாநாட்டில் வைத்து ஒன்றைக் கூறிவைக்க விரும்புகின்றேன். 2015 ஜனாதிபதித் தேர்தலில் என்னை வெல்ல வைப்பதற்கு வடக்கு மாகாண மக்கள் அனைவரும் வாக்களித்தார்கள். அந்த நன்றிக் கடனுக்காகவே நான் எனது ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணம் மற்றும் வட பகுதிக்கு அதிக தடவைகள் வருகை தந்து பல்வேறுபட்ட அபிவிருத்தி செயற்றிட்டங்களை முன்னெடுத்திருந்தேன்.

அந்த நன்றிக் கடனை நான் என்றும் மறக்கமாட்டேன். வடக்கு மாகாணத் தமிழ் மக்களுக்கு எனது நன்றிக் கடன் என்றும் இருக்கும். அவர்களை ஒருபோதும் மறக்கமாட்டேன்.

எமது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனைப் பலப்படுத்துவதன் மூலம் இந்த மாவட்டத்தில் நல்லிணக்கம், சமாதான நிலைமையை முன்னெடுத்து முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும்" - என்றார். (K)

Post a Comment

Previous Post Next Post