எம்.எம்.ஸுஹைர் (ஜனாதிபதி சட்டத்தரணி)
இலங்கையில் இடம்பெற்ற படுபயங்கரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர் ஸ்தானிகர் மிச்செல் பாச்லெட், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இம்மாதம் 28ஆம் திகதி சமர்ப்பிக்கவிருக்கிறார்.
குறிப்பாக இலங்கையில் நடப்பதாக கூறப்படும் இத்தகைய உரிமை மீறல்களைக் கண்காணிப்பதற்கு கடந்த ஆண்டில் ஜெனீவாவில் நிறுவப்பட்ட விசேட பொறிமுறையானது ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவை பலப்படுத்த வழிவகுத்தது. அந்த சிறப்புப் பொறிமுறைக்கு ‘இலங்கை பொறுப்புக்கூறல் திட்டம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த 26 ஜனவரி 2021 அன்று ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகம் வெளியிட்ட முன்னைய அறிக்கையில் “தேசிய அளவில் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதில் அரசாங்கத்தின் ‘இயலாமை மற்றும் விருப்பமின்மை’ தெளிவாக நிரூபணமாகியுள்ளது. இந்நிலையில், சர்வதேச குற்றங்களுக்காக நீதியை நிலைநிறுத்துவதற்கான சர்வதேச நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் இம்முறை ‘இலங்கையில் அனைத்துத் தரப்பினராலும் இழைக்கப்பட்ட சர்வதேச குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் வழக்குகளை அவர்களின் தேசிய நீதிமன்றங்களில் தொடர்வதற்கு’ ஆணைக்குழுவின் உயர் ஸ்தானிகர் பாச்லெட், ஐ.நா.வின் உறுப்பு நாடுகளை மீண்டும் ஒருமுறை மிகவும் அழுத்தமாக வலியுறுத்தவுள்ளார்.
இந்த விடயத்தில் அமெரிக்காவின் கடந்தகால நடைமுறைகளின்படி இலக்கு வைக்கப்பட்ட தண்டனைகள் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளின் குடும்ப உறுப்பினர்களையும் உள்ளடக்கியதாகவே இருக்கும். இலங்கையின் அப்பாவி குடும்ப உறுப்பினர்களுக்கு இத்தகைய தண்டனைகள் விதிக்கப்படுவது எத்தகைய அதிர்ச்சியையும் தருவதில்லை. காரணம் இலங்கை மக்கள் இவ்வாறான தண்டனைகளை ஏன் எதற்கு என்று தெரியாமலேயே அனுபவித்து வருகின்றனர். இலங்கையில் அதற்கான பல வழக்குகள் ஆதாரங்களாக பதிவாகியுள்ளன. உதாரணமாக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாட்டி நேரடி குடும்ப உறுப்பினர்களை கைது செய்து பல மாதங்களாக தடுத்து வைத்த சம்பவங்கள் ஏராளம் உண்டு. அவர்களில் ஒரு சிலர் சட்டமா அதிபரின் பரிந்துரையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். உதாரணத்திற்கு ஒரு வழக்கில் தேயிலை ஏற்றுமதியாளர் ஒருவர், இரண்டு வருடங்களும் ஒன்பது மாதங்களும் அரச தடுப்புக் காவலில் இருந்த பின்னர் விடுவிக்கப்பட்டார். இலங்கையில் கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கான தண்டனையாக விசா மறுக்கப்படுவதானது, அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களையும் மருத்துவம், கல்வி அல்லது பிற நோக்கங்களுக்காக செல்வதற்கு அனுமதிக்கும் நாடுகளுக்குச் செல்வதைக் கூட தடுக்கலாம். இது ஒருவேளை நடந்தால், குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர்கள் அந்தந்த உறுப்பு நாடுகளுக்குச் செல்லும் போது கைது செய்யப்படுவதற்கான சாத்தியமும் உள்ளது.
மனித உரிமைகள் மீதான ‘கிரிமினல்’ மீறல்கள் வழக்குகளில் முன்னர் விதந்துரைத்துள்ள தண்டனைகள் போதுமானது அல்ல என வாதிடுபவர்களும் உள்ளனர். மீறல்கள் தங்கள் அதிகார வரம்பிற்குள் வரும்போது அவற்றைச் சீர்செய்வதற்கு அரச வழக்கறிஞர்களும் நீதித்துறையும் உடனடி நடவடிக்கை எடுப்பதைத் தவிர்ப்பதற்கும் எதிர்பார்த்த தண்டனைகள் போதாது என்றே அவர்கள் கருதுகின்றனர். எவ்வாறாயினும் ஜெனீவாவின் இலங்கை பொறுப்புக்கூறல் பொறிமுறை திட்டத்தை மதிப்பிடுவதற்கு எதிர்வரும் 2022 மார்ச் அமர்வுகளின் முடிவுகள் வெளியாகும் வரை நாம் பொறுத்திருக்க வேண்டும்.
இந்நிலையில் பாரபட்சமான நடைமுறைகளுக்கு நாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளோமா? சிஐடி, ரிஐடி மற்றும் அரச புலனாய்வு அதிகாரிகள் உட்பட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக 40க்கும் மேற்பட்ட சிவில் சமூக அமைப்புகள் தேவையற்ற கெடுபிடிகளுக்கும் துன்புறுத்தல்களுக்கும் முகம்கொடுப்பதாக கூறப்படும் புகார் மனுக்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக ஐ.நா அறிக்கை கூறுகிறது. மேலும் அனைத்து வகையான கண்காணிப்புகளையும் உடனடியாக நிறுத்துமாறும் அறிக்கை வலியுறுத்தியுள்ளது. தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினரை ஓரங்கட்டும் அளவிற்கு உரிமை மீறல் மோசமடைந்துள்ளதாக அந்த அறிக்கை எச்சரிக்கையும் விடுத்துள்ளது. உயர்மட்ட அரச அதிகாரிகளின் பிளவுபடுத்தும் கருத்தாடல்கள் மற்றும் பாரபட்சமான வெறுப்புச் சொல்லாடல்கள் துருவமுனைப்பை ஏற்படுத்தி வன்முறையை உருவாக்கும் அபாயத்திற்கும் கட்டியம் கூறுகிறது. கொவிட்-19 இன் இடர்கால சூழலிலும், ஏப்ரல் 21 இன் ஈஸ்டர் தாக்குதலின் பின்னரும் அப்பாவி இலங்கை முஸ்லிம் சமூகம் அதிகளவில் பலிக்கடாவாக்கப்பட்டுள்ளனர். இந்த உண்மைகள் மறுக்கப்பட முடியுமா? கோவிட் காரணமாக மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அவர்களுடைய மத அனுஷ்டானங்களுக்கு இணங்க அடக்கம் செய்வதற்குரிய மத உரிமைகள் மறுக்கப்பட்டது முதல் அண்மைக்காலத்தில் முஸ்லிம் சிறார்களுக்குரிய இஸ்லாம் பாடப்புத்தகங்கள் மீண்டும் எழுதப்பட வேண்டும் என்ற அரச தரப்பின் பாகுபாடுகள் வரை உரிமை மீறல் பட்டியல் நீண்டு செல்கிறது.
முஸ்லிம்களை தீவிரவாதிகளாக்கும் இஸ்ரேலிய திட்டம் முதலீட்டாளர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் பாதிக்கும்
இப்போது நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? இலங்கை அரசு பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் உதவுவதற்காக இஸ்ரேலை இங்கு அழைத்து வருகிறது. நண்டைச் சுட்டு நரிகளை காவல் வைப்பது போல 75 ஆண்டுகளாக பலஸ்தீனியர்களின் சொந்த பூமியை ஆக்கிரமித்து நரவேட்டையாடிய ஒரு நாட்டின் உதவியை இலங்கை கோரியிருப்பது சிறுபான்மை முஸ்லிம்களை இலக்கு வைப்பதாகவே கருதவேண்டியுள்ளது. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பதிலாக அதனை திட்டம்போட்டு வளர்ப்பதில் இஸ்ரேலுக்கு பெரும் பங்குண்டு. அத்தகைய கைங்கரியத்தை செய்யும் நிபுணத்துவமும் திறமையும் இஸ்ரேலுக்கு உண்டு என்பதற்கு வரலாறு சான்றாகும். இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவில் உள்ள நூற்றுக்கணக்கான ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகள் தொடராக இயங்குவதற்கு இஸ்ரேல் பாடுபடுகிறது என்பது பகிரங்க ரகசியமாகும்.
இஸ்ரேல் பயங்கரவாத எதிர்ப்புத் திட்டத்திற்காக இங்கு வருகை தருவதை “இலங்கை முஸ்லிம்களை தீவிரவாதிகளாக்கும் இஸ்ரேலிய திட்டம்” என்று குறிப்பிடுவதில் தவறில்லை. இலங்கைக்கு எஞ்சியிருக்கும் வெளிநாட்டு வளங்களின் கடைசித் துளியையும் கிள்ளி எடுக்க இவர்களின் வருகை போதுமானது. பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த வாகனங்கள் உட்பட எனைய வளங்களையும் பரிசாக வழங்குவதற்கு ஜப்பான் பரந்த விளம்பரத்தை அளித்து வருகிறது. உண்மையான வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவிடாமல் பயமுறுத்துவதற்கு இந்த இரு நாடுகளும் போதுமான திறன் கொண்டவை.
இந்த அறிவிப்பு (சண்டே டைம்ஸ் 06.02.2022) நமது உயிர் வாழ்வுக்கு இன்றியமையாத அந்நிய முதலீட்டை திசை திருப்பி விடும் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை. காரணம் குறித்த இந்த நாடு பயங்கரவாதத்தை அதன் மண்ணிலிருந்து ஒருபோதும் முடிவுக்குக் கொண்டுவரவில்லை என்பதே உலகறிந்த செய்தியாகும். இஸ்ரேல் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் – தீவிரவாத ஆயுதக் குழுவையும் அதன் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளையும் நியாயப்படுத்துவதற்காக இங்கு அழைத்துவரலாம். உலகில் பயங்கரவாதத்தை முறியடித்த ஒரு சில நாடுகளில் இலங்கையும் ஒன்று. ஆனால் 30 வருட கால யுத்தத்தின் போது எமக்கு ஆயுதங்களை விற்றதன் மூலம் (அன்பளிப்பாகஅல்ல) பயனடைந்த நாடுகளில் இஸ்ரேலும் ஒன்று. அதனால் இஸ்ரேல் வளம் பெற்றது. நாம் அத்தியாவசியத் தேவைகளுக்காக வரிசையில் நிற்கின்றோம். இரசாயன உரங்களுக்கான தடைச் சட்டம் நாட்டின் விவசாயத்தை நாசமாக்கியது. அது ஒரு முட்டாள்தனமான முடிவு என்பது இன்று நிதர்சனமாகியுள்ளது. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு அரசு எடுக்கும் இத்தகைய தீர்மானம் முட்டாள்தனமாக பயணத்தை தொடரவுள்ளோம் என்பதையே எதிர்வு கூறுகிறது.
எவ்வாறாயினும், இங்கு இடம்பெறும் சில மனித உரிமை மீறல்கள் மேற்கத்திய ஆயுதத் தொழிற்சாலைகளின் நலன்களுக்காக தொழிற்படும் வெளிநாட்டு முகவர்களினால் திட்டமிட்டு தூண்டப்படுகிறது என பலர் நம்புகின்றனர். இன்னும் சில உரிமை மீறல்கள் வேறுசில வழிகளிலும் உருவாகின்றன. சிறுபான்மையினருக்கு எதிரான மற்றும் இஸ்லாம் பற்றிய பீதியும் வெறுப்பு சொல்லாடல்களும் வெளிநாட்டு அரசு சாரா செயற்பாட்டாளர்களிடமிருந்தும் அண்டை நாடுகளிலிருந்தும் தோன்றியதாகக் கூறப்படுகிறது. இது குறித்தும் எமது கவனக் குவிப்பு அவசியமாகும். வட கிழக்கில் தனிநாடு அமைக்கும் தாகத்தோடு நடைபெற்ற மூன்று தசாப்த கால தமிழீழ விடுதலைப் புலிகளின் போருக்கு இலங்கை முஸ்லிம்களின் ஆதரவு இல்லாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஈஸ்டர் தாக்குதல்களை வெளிநாட்டு மத விரோத சுரண்டல் சக்திகள் பயன்படுத்திக் கொள்வதாக இலங்கை முஸ்லிம்களும் நம்புகின்றனர்.
மூன்று தசாப்த கால போரில் அரசுக்கு ஆதரவாக இருந்த சிறுபான்மை முஸ்லிம்களை பழிவாங்கலாமா?
இந்தப் பின்னணியில்தான் வெளிவிவகார அமைச்சின் கண்துடைப்புக்கான முயற்சியை நோக்கவேண்டியுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்வதற்குப் பதிலாக அல்லது குறைந்தபட்சம் அரசியலமைப்பில் உள்ள அடிப்படை உரிமைகள் விதிகளுக்கு இணங்க அதனை கொண்டு வருவதற்குப் பதிலாக வெறும் கவர்ச்சிக்காக மட்டும் படம் காட்டும் வெளியுறவு அமைச்சின் ஏமாற்று முயற்சியை நாம் பார்க்க வேண்டும். அனைத்து துறைகளிலும் இலங்கையின் சொந்தக் குடிமக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் அடக்குமுறைச் சட்டங்களைப் புதுப்பிக்குமாறு சர்வதேச அமைப்புகள் இலங்கை அரசாங்கத்தை நிர்ப்பந்திப்பது கவலை தருகின்றது.
அளுத்கம, திகன, மினுவாங்கொட போன்ற பகுதிகளில் உள்ள பெரும்பான்மையினர் சட்டத்தை மீறிய போது பயங்கரவாத தடைச் சட்டத்தை பிரயோகிக்க விரும்பாத அதேநேரம், மாவனல்லை புத்தர் சிலை சம்பவங்களில் முஸ்லிம்களுக்கு மட்டும் கடுமையான பயங்கரவாத தடைச்சட்டத்தை பிரயோகித்தமையிலும் பிரச்சினை உள்ளது. முப்பது வருட கால யுத்தத்தில் முஸ்லிம்கள் நாட்டின் பெரும்பான்மை பக்கம் நின்றதற்காக குற்றம் சுமத்தி சிறுபான்மை முஸ்லிம்களை பழிவாங்குவது போல் அரசியல்வாதிகளும் ஊடகத் துறையினரும் ஈஸ்டர் தாக்குதலை நியாயமான தேவைகளுக்கு அப்பால் தொடர்ந்தும் உயிர்வாழ வைக்கின்றனர். ஏப்ரல் 21 தாக்குதல் நடந்த அந்த நொடியிலேயே உண்மையான பயங்கரவாதிகள் அனைவரும் முழுமையாக அழிந்து நாசமாகிய போதிலும், அரசாங்கத்தின் “வெளிப்படையான இயலாமை மற்றும் விருப்பமின்மை” கொள்கையை பயன்படுத்தி உண்மையான தேசப்பற்றுள்ள குடிமக்களுக்கு கண்ணியம் வழங்குவதாக கற்பிதம் செய்து செய்து கொண்டு பயங்கரவாதத்தை ஒழிக்கிறோம் என்ற போலிக்காரணத்தின் கீழ் 2000 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். இந்தப் போக்கு இன்னும் பல ஆண்டுகளுக்கு நாட்டை குட்டிச்சுவராக்கும் என்பதில் சந்தேகமில்லை. சுருக்கமாகச் சொன்னால், இலங்கைத் தாய்நாட்டின் உண்மையான தேசபக்தர்களின் அவலநிலையே இதுவாகும்.
நாடெங்கும் வெறுப்புணர்வைத் தூண்டியதாக கிரிமினல் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவினாலும், ஜனாதிபதி ஆணைக்குழுவினாலும் தண்டிக்கப்படாமல் விடப்பட்டுள்ளனர். ஆனாலும் ஏப்ரல் 21 தாக்குதல் நிகழ்ந்த அந்த கடினமான சூழ்நிலையில் கிறிஸ்தவ திருச்சபையும் தலைசிறந்த பௌத்த மதகுருக்களும் வழங்கிய அமைதியான அன்பான தலைமைத்துவ பணியை முஸ்லிம் சமூகம் ஒரு போதும் மறக்காது. எமது தாய் திருநாட்டை படுகுழியில் தள்ளுவதை விட பயங்கரவாத தடைச் சட்டத்தை புதைக்க வேண்டிய தருணம் வந்துள்ளது.- Vidivelli
Post a Comment