Top News

மெத்தியூஸ், லஹிரு மீண்டும் இலங்கை அணிக்குள்



(எம்.எம்.சில்வெஸ்டர்)


தனிப்பட்ட காரணங்களுக்காக சில காலமாக கிரிக்கெட் விளையாடாமலிருந்த எஞ்சலோ மெத்தியூஸ், முன்வரிசை துடுப்பாட்ட வீரரான லஹிரு திரிமான்ன ஆகிய இருவரும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணிக்கு மீள அழைக்கப்பட்டுள்ளனர்.


இவர்களைத் தவிரவும், போட்டித் தடையிலிருந்து மீண்டு வந்த நிரோஷன் திக்வெல்லவும், சர்வதேச கிரிக்கெட் அறிமுகத்தை பெற்றிராத அஷெய்ன் டேனியல் ஆகியோரும் இலங்கை டெஸ்ட் குழாத்தில் இடம்பெறவுள்ளனர்.


அனுபவ வீரரான மெத்தியூஸ், இதுவரை 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11 சதங்கள், 37 அரைச்சதங்கள் அடங்கலாக 6338 ஓட்டங்களை குவித்துள்ளதுடன், லஹிரு திரிமான்ன 42 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 சதங்கள், 10 அரைச் சதங்களுடன் 2063 ஓட்டங்களை குவித்துள்ளார்.


கடந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் போது சுகாதார கட்டுப்பாட்டு விதிகளை மீறிய குற்றச்சாட்டில் போட்டித் தடையிலிருந்து மீண்டு வந்த நிரோஷன் திக்வெல்லவுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.


மேலும், இலங்கையின் இளம் சுழற்பந்துவீச்சாளரான ரமேஷ் மெண்டிஸ் உபாதைக்குள்ளாகியுள்ளதால், அண்மைக் காலமாக உள்ளூர் முதற்தர போட்டிகளில் சிறப்பான ஆற்றல்களை வெளிப்படுத்தியிருந்த அஷெய்ன் டேனியலுக்கு டெஸ்ட் குழாத்தில் வாய்ப்ளிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவுக்கு எதிரான இருபதுக்கு 20 கிரிக்கெட் குழாத்திலும் அஷெய்ன் டேனியல் இடம்பெற்றுள்ளமை கவனிக்கத்தக்கது.


இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் திமுத் கருணாரட்ண, உப தலைவர் தனஞ்சய டி சில்வா மற்றும் சுரங்க லக்மால் ஆகிய மூவரும் தற்போது 7 நாட்கள் கொண்ட 'பயோ பபுள்' முறையிலான தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தனிமைப்படுத்தல் நடவடிக்கை முடிந்ததும், அவர்கள் இந்தியா நோக்கி புறப்பட்டுச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதேவேளை, எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியினர் தற்போது இந்தியாவில் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post