திருகோணமலை சன்முகா இந்து மகளிர் கல்லூரியில் கற்பிக்கின்ற முஸ்லிம் ஆசிரியையான பாத்திமா பஹ்மிதா மீதான அத்துமீறல் மிகவும் கண்டிக்கத்தக்கதும் மிலேச்சத்தனமானதுமாகும்.
"ஒரு இனத்தின் கலாசாரத்தை மதிப்பது அந்த இனத்தின் உரிமை ஆனால் இன்னுமொரு இனத்தின் கலாசாரத்தை திணிப்பது எந்த வொரு இனத்தின் உரிமையல்ல."
கடந்த மூன்று தசாப்த காலமாக இந்நாட்டில் புற்று நோயாக இருந்து வந்த இன வன்முறைகள் முடிவுக்கு கொண்டு வந்து அனைத்து சமூகங்களும் ஒற்றுமையாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தியிருக்கும் இந்தக்காலகட்டத்தில் வெளிநாட்டுச் சக்திகளின் நிகழ்ச்சி நிரலில் இயங்குகின்ற ஒரு சில வன்மக்குழுக்கள் இனத்தின் பெயராலும்.மதத்தின் பெயராலும் நாட்டுக்குள் பிரிவினையை ஏற்படுத்தி அதன் மூலம் சுய இலாபம் அடைய முயற்சித்து வருகின்றார்கள்.
இந்நாடு பல்லின பல்கலாசார சமூக அமைப்பைக் கொண்ட நாடாகும்.அவரவர் கலாசாரம் என்பது அவர்களின் உரிமையாகும். இவ்வுரிமை இலங்கையின் தாய்ச் சட்டமான அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்கப்பட்டதாகும். அதனை அத்துமீறவோ யாருடைய சுய விருப்பு வெறுப்புக்கேற்ப கட்டுப்படுத்தவோ முடியாது.
இந்நாட்டில் இருக்கின்ற எந்த அரச பாடசாலை முறைமைக்குள்ளும் நடக்காத அராஜக ஜனநாயக விரோத நிகழ்வு இன்று திருகோணமலை சன்முகா இந்து மகளிர் கல்லூரி கல்விச் சமூகம் என்று கூறிக்கொள்கின்ற ஒரு சில இனத்துவேசிகள் அரங்கேற்றியிருப்பது ஒரு சமூகத்தின் உரிமைக்கு பாரிய அச்சுறுத்தலாகவும் சவாலாகவும் அமைந்துள்ளது.
பாடசாலை என்பது அறிவையும், ஒழுக்கத்தையும் எதிர்கால சந்ததியினருக்கு போதிக்கின்ற ஒரு சமூக நிறுவனமாகும்.இந்த நிறுவனத்தின் அறிவிலிகள் சிலர் முஸ்லிம் பெண் ஆசிரியை மீது உடலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்த முனைந்திருப்பது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்தாகும். இது மாணவர்களுக்கு பிழையான நடைமுறையை கற்றுக் கொடுக்கின்ற செயற்பாடாகும்.
சன்முகா கல்லூரி நிர்வாகத்தைப் போன்று ஒவ்வொரு இனப்பாடசாலைகளும் தங்களது கலாசாரத்தை பிரதிபலிக்கும் ஆடைகளை அணிய வேண்டும் என்று வற்புறுத்துமாயின் பாடசாலைகளில் பல்லின ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஏனைய கல்விப்புல அதிகாரிகள் தமது பணியினை சிறப்பாக செய்ய முடியாத நிலை உருவாகும்.
அரச நிறுவனங்களில் கடமையாற்றுகின்றவர்கள் அரசியலமைப்பு ரீதியாக மற்றைய சமூகத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டியதோடு நடைமுறையிலுள்ள அரச நிர்வாக சட்டதிட்டங்களையும் பின்பற்றத் தெரிந்திருக்க வேண்டும்.யாருடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு உட்பட்டு அரச நிர்வாக இயந்திரத்தை கொண்டு செல்ல முடியாது. மற்றையவர்களுக்கு முன்மாதிரியை கற்றுக் கொடுக்க வேண்டிய கல்விச் சமூகம் இன வெறி கொண்டு செயற்படக்கூடாது.
அரச நிறுவனங்களில் அரசின் ஒருமைப்பாட்டிற்கு எதிராக செயற்படுகின்ற இவ்வாரான வன்மக்குழுக்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை வழங்குவதன் மூலம் பாதிக்கப்பட்ட அந்த பெண் ஆசிரியையான பாத்திமா பஹ்மிதாவிற்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.
Post a Comment