Top News

அத்தியாவசியப் பொருட்களை உடன் விடுவிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை





சுங்கத் திணைக்களத்தின் வசமுள்ள அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.




சந்தையில் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாதிருப்பதை இலக்கு வைத்தே, ஜனாதிபதியினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.




உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைத் தட்டுப்பாடின்றி வழங்குவதற்காக, நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தலைமையிலான குழுவொன்றை நியமிக்கவும், ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.




சுங்கத் திணைக்களத்தின் வசமுள்ள அத்தியாவசியப் பொருட்களை விடுவிப்பது தொடர்பிலான விசேட கூட்டமொன்று, ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07) நடைபெற்றது.




எதிர்வரும் உற்சவக் காலத்தின் போது, உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைத் தட்டுப்பாடின்றி பொதுமக்கள் கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென்று எடுத்துரைத்த ஜனாதிபதி அதற்காக தற்போதிருந்தே உரிய திட்டமிடல்களை வகுக்குமாறு, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.




தெரிவு செய்யப்பட்ட சில அத்தியாவசியப் பொருட்களின் கொள்வனவுக்குச் சந்தர்ப்பம் வழங்குமாறும் இதன்போது, குறுகிய எண்ணங்களுடன் அதிகப்படியான பொருட்களை இறக்குமதி செய்வதற்கோ அல்லது பொருட்களைப் பதுக்கி வைப்பதற்கோ இடமளிக்கக் கூடாது என்றும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.




உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைச் சந்தைக்கு விநியோகிப்பது தொடர்பில் முறையான பொறிமுறையொன்று உடனடியாகத் தயாரிக்கப்பட வேண்டுமென்று அறிவுறுத்திய ஜனாதிபதி இது தொடர்பான ஒழுங்குபடுத்தல்கள் மற்றும் மேற்பார்வைப் பணிகள், புதிய குழுவிடம் ஒப்படைக்கப்பட்டன.


Post a Comment

Previous Post Next Post