Top News

அரசாங்கம் நாளாந்தம் போலித் தகவல்களையே வெளியிடுகிறது - சஜித் பிரேமதாச



(எம்.மனோசித்ரா)


அரசாங்கம் அதன் சகாக்களுக்கு பண மோசடியில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவே ஒரு இலட்சம் வேலைத்திட்டம் என்ற விளையாட்டை ஆரம்பித்திருக்கிறது. இதற்காகவே ஊழியர் சேமலாப நிதியத்திலும் கைவைத்துள்ளது. இந்த மோசமான செயற்பாட்டினை தொடர்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் இடமளிக்காது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


மேலும் நாட்டில் தற்போது 600 - 800 மில்லியன் டொலர் மாத்திரமே இருப்பில் உள்ளது. இது அடுத்த 3 வாரங்களுக்கான இறக்குமதி செலவிற்கு மாத்திரமே போதுமானதாக இருக்கும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.


ஹிரியால பிரதேசத்தில் சனிக்கிழமை (12) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.


அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதித் தேர்தலில் 69 இலட்சம் வாக்குகளையும், பொதுத் தேர்தலில் 68 இலட்சம் வாக்குகளையும் பெற்றுள்ள முட்டாள் அரசாங்கம், முட்டாள்த்தனமான செயற்பாடுகளையே முன்னெடுத்துள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.


அதன் காரணமாக செழிப்பாகக் காணப்பட்ட விவசாயத்துறையை ஒரு இரவிற்குள் எடுத்த தீர்மானத்தினால் முழுமையாக சீரழித்து விட்டு, தற்போது நிவாரணம் வழங்குவதற்கு வைபவங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.


அனைத்து விவசாயிகளுக்கும் இலட்சக் கணக்கில் பாதிப்புக்களை ஏற்படுத்தி விட்டு, வரையறுக்கப்பட்ட சிறிய தொகையை நிவாரணங்களாக வழங்குகின்றனர்.


ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் தரத்தில் உயர்ந்த உரம், கிருமி நாசினி மற்றும் களை நாசினி உள்ளிட்டவை விவசாயிகளுக்கு நிச்சயம் வழங்கப்படும் என்று உறுதியளிக்கின்றேன்.


உரம் கூட இல்லாமல் விவசாயிகளின் வாழ்வாரத்தை 100 சதவீதம் மேம்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ள அரசாங்கம் அது எவ்வாறு என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.


இவ்வாறான நிலையில் ஒரு இலட்சம் வேலைத்திட்டம் என்ற புதிய விளையாட்டையும் தற்போது அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.


நாட்டில் அதிகளவு நிதியைக் கொண்டுள்ள அதாவது 3000 பில்லியன் ரூபாவைக் கொண்டுள்ள ஊழியர் சேமலாப நிதியத்தில் கைவைத்து அரசாங்கம் இந்த விளையாட்டினை ஆரம்பித்திருக்கிறது.


ஒரு இலட்சம் வேலைத்திட்டத்தின் ஊடாக அரசாங்கத்தின் சகாக்களுக்கு தரகுப் பணத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கும், மோசடிகளில் ஈடுபடுவதற்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கே அரசாங்கம் இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளது.


இதன் காரணமாகவே ஊழியர் சேமலாப நிதியத்திடம் 25 சதவீதம் வரி அறவிட திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த மோசமான செயற்பாட்டிற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் இடமளிக்காது.


69 இலட்சம் மக்களில் ஒரு பகுதியினர் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளனர். ஏனையோருக்கும் எம்முடன் இணைவதற்கு கதவுகள் திறந்தே காணப்படுகின்றன.


அரசாங்கம் தற்போது பாக்கிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மேற்குலக நாடுகளிடம் டொலருக்காக கையேந்திக் கொண்டிருக்கிறது. ரணசிங்க பிரேமதாச எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறு கையேந்தி உண்ணும் நிலைமையை ஏற்படுத்தவில்லை.


இவ்வாறான நிலைமையிலும் கூட அரசாங்கம் நாளாந்தம் போலியான தகவல்களையே வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. அந்நிய செலாவணி இருப்பு 3.1 பில்லியனிலிருந்து 2.3 பில்லியனாகக் குறைவடைந்துள்ளதாகக் கூறுகிறது.


எஞ்சியுள்ள 2.3 பில்லியன்களில் சீனாவிடமிருந்து பெற்றுக் கொண்ட 10 பில்லியன் யுவான்களும் உள்ளடங்குகிறது. யுவான்களை எவ்வாறு டொலராகக் கருத முடியும்? உண்மையில் அரசாங்கத்திடம் தற்போது 600 - 800 மில்லியன் டொலர் இருப்பு மாத்திரமே காணப்படுகிறது. இது எதிர்வரும் 3 வாரங்களுக்கான இறக்குமதிக்கு மாத்திரமே போதுமானதாகும்.


இந்த பிரச்சினைகளுக்கு பணத்தை அச்சிடுவதன் மூலம் தீர்வு காண முடியும் என்று அரசாங்கம் கருதுவது தவறாகும். வரையறையின்றி பணத்தை அச்சிட்டால் பண வீக்கம் அதிகரித்துச் செல்லும்.


அவ்வாறான நிலைமை ஏற்பட்டால் ஆஜன்டீனா மற்றும் சிம்பாபே ஆகிய நாடுகளைப் போன்று சுமை கொண்டு செல்லும் வண்டியில் பணத்தைக் கொண்டு சென்று பொருட்களை வாங்க வேண்டிய நிலைமை ஏற்படும். உண்மையில் இலங்கை பண வீக்கம் அதிகரித்துச் செல்லும் நாடாக மாற்றமடைந்துக் கொண்டிருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது என்றார்.

Post a Comment

Previous Post Next Post