Top News

பிரதமரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி




சுதந்திரம் என்பது வெற்றி பெற்று முடிந்துவிடக் கூடியதல்ல. அது நாளுக்கு நாள் வெற்றி கொள்ள வேண்டியதொன்று. அதுவே நாம் ஒவ்வொரு சுதந்திர தினத்திலும் வலியுறுத்த வேண்டிய விடயமாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பல சவால்களுக்கு மத்தியிலேயே எமக்கு எழுபத்து நான்காவது சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டியுள்ளது. இரண்டு ஆண்டுகளாக முழு உலகையும் பாதிப்புக்குள்ளாக்கிய கொரோனா தொற்றினால் நாம் எதிர்நோக்கியுள்ள சவால்கள் பலவாகும்.

அன்று அந்நிய படையெடுப்புகள் போன்றே பிரிவினைவாத பயங்கரவாதத்தினால் எமது நாட்டு மக்கள் சுதந்திரத்தை இழக்க நேரிட்டதுடன், இன்று கொரோனா தொற்றினால் மக்கள் சுதந்திரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டை கட்டியெழுப்புவதற்கான இரு பொன்னான ஆண்டுகளை கொரோனா தொற்று எமக்கு இல்லாது செய்தது. கல்வி, பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கையை தலைக்கீழாக மாற்றியது. ஆனால் சுதந்திரத்துக்காக போராடிப் பழகிய தேசம் என்ற வகையில் நாம் அதனால் துவண்டு போகப் போவதில்லை.

முழு உலகமும் பல சிரமங்களுக்கு முகம் கொடுத்த போதிலும், அதிலிருந்து விடுபடுவதற்கு உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சகல சாதகமான செயற்பாடுகளையும் நாமும் கடைப்பிடித்தோம். கொரோனா தொற்றுக்கு தீர்வான மூன்று தடுப்பூசிகளையும் நாம் மக்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ளோம். நாம் கடைப்பிடித்த இச்செயற்பாடுகளின் மூலமே கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப முடிந்துள்ளது.

சுதந்திரம் என்பது வெற்றி பெற்று முடிந்துவிடக் கூடியதல்ல. அது நாளுக்கு நாள் வெற்றி கொள்ள வேண்டியதொன்று. அதுவே நாம் ஒவ்வொரு சுதந்திர தினத்திலும் வலியுறுத்த வேண்டிய விடயமாகும். எவ்வாறாயினும் சுதந்திரத்துக்காக பல நூறு ஆண்டுகளாக தொடர்ச்சியாக போராடி பக்குவப்பட்ட தேசத்துக்கு இந்த சவாலுக்கும் முகம் கொடுத்து செயற்பட முடியுமென்பது எனது நம்பிக்கையாகும். சுதந்திரத்திற்காக உண்மையாக போராடிப் பழகிய தேசமென்ற வகையில் இச்சவாலையும் எதிர்த்து போராடுவதற்கு இந்த சுதந்திரத் தினத்தில் உறுதி கொள்வோமென்றும் பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post