Top News

செல்வாக்கு உள்ளவர்களை கருவிகளாக பாவித்து மணல் அகழ்வு



எஸ்.றொசேரியன் லெம்பேட்

உயர் அரச மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களை கருவிகளாக பாவித்து, உரிமங்களைப் பெற்று, கனிய மணல் அகழ்வு நடவடிக்கையை அவுஸ்திரேலிய கம்பெனி தொடர்வதாக நாங்கள் அறிகிறோம். இந்த மணல் அகழ்வினால் இலங்கையில் வாழும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு எந்த நன்மைகளும் இல்லை என 'மன்னார் சுற்றாடலை பாதுகாப்போம்' அமைப்பினர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

மன்னாரில் இன்று (14) காலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அந்த அமைப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில், “மன்னாரில் சுமார் 5 வருடங்களுக்கு மேலாக கனிய மணல் ஆய்வுகள் மிகவும் இரகசியமான முறையில் அவுஸ்திரேலிய நிறுவனத்தால் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மன்னாரிலுள்ள சுற்றாடலை பாதுகாப்போம் அமைப்பு பெற்றுக்கொண்ட தகவல்கள் அடிப்படையில், மதத் தலைவர்கள், பிரஜைகள் குழு, பொதுமக்கள் இணைந்து எமது எதிர்ப்பை வெளியிட்டு, ஜனாதிபதி வரை தெரிவித்திருக்கிறோம்.

“அண்மையில் எங்களோடு கலந்துரையாடிய பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன், எங்களுடைய ஆதங்கங்களை கேட்டு, இந்த மாதத்தின் இறுதியில் அவுஸ்திரேலிய தூதருடன் மன்னாரில் உள்ள எமது குழுக்களையும் இணைத்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

“இந்த மணல் அகழ்வுகள் தொடருமாக இருந்தால் கடலுக்குள் மூழ்கி மன்னார் மாவட்டம் செயலிழந்து சூனியப் பிரதேசமாக மாறிவிடும். ஆகவே, எங்களால் முடிந்த அளவு மக்களைத் திரட்டி, அரசு அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி வரை எங்களுடைய ஆதங்கத்தை தெரியப்படுத்துகிறோம். தொடர்ந்து தெரியப்படுத்துவோம்.

“ஆனால், தாங்கள் எந்த அளவுக்கு எதிர்ப்புகளை தெரிவிக்கின்றோமோ அந்த அளவிற்கு அவுஸ்திரேலிய நிறுவனம் இதை ஆய்வு செய்வதில் முனைப்புக் காட்டி வருகிறார்கள்.

“எமது எதிர்ப்புகளால் புவிச்சரிதவியல் திணைக்களம் இதற்கான உரிமத்தை நிறுத்தி இருந்தது. ஆனால், தற்போது ஆராய்ச்சி செய்வதற்கு புவிச்சரிதவியல் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. அது எவ்வாறு நடைபெற்றது என்பதை எங்களால் அறிய முடியாமல் இருக்கிறது.

“இதில் மிகவும் வேதனையான விடயம் என்னவென்றால், இந்த கனிய மணல் அகழ்வு தொடர்பாக மன்னார் மாவட்டத்தில் இருக்கின்ற உயர் அரச அதிகாரிகளுக்கு எதுவும் தெரியாது என்று கை விரிக்கின்றார்கள்.

“எது எப்படி இருந்தாலும் உயர் அரச மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களை கருவிகளாக பாவித்து தான் இந்த உரிமங்களை பெற்று கனிய மணல் அகழ்வு நடவடிக்கையை அவுஸ்திரேலிய கம்பெனி தொடர்வதாக நாங்கள் அறிகிறோம்” என்றனர்.

Post a Comment

Previous Post Next Post