பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் போது எதிர்கொள்ளும் சவால்களின் தன்மை மற்றும் அளவு என்பன ஒரு பொருட்டல்ல என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.
கொவிட் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் அதே சமயம், நாட்டின் அபிவிருத்திப் பணிகளும் முன்னெக்கப்பட்டு வருகின்றன.
அதேபோன்று, சுமார் இரண்டு வருடக் காலமாக நாட்டை மூடி வைத்ததால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி, தற்போது படிப்படியாகக் கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது என்றும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.
பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில் வல்லுநர்களுடனான முதலாவது மாநாடு, ஜனாதிபதி மாளிகையில் நேற்று (11) மாலை இடம்பெற்றது. இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி எதிர்பார்க்கும் இலக்கை அடைவதற்குத் தேவையான பலத்தைப் பெற்றுக்கொடுத்து, தேசிய வேலைத்திட்டத்தை வெற்றிகொள்வதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக, இந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்த தொழில் வல்லுநர்கள் தெரிவித்தனர்.
ஜனாதிபதி வேலைத்திட்டங்கள் தொடர்பில், பெரும்பாலான மக்கள் நேர்மறைச் சிந்தனையுடனேயே காணப்படுகின்றனர். அதனால், குறுகிய அரசியல் நோக்கத்தில் முன்னெடுக்கப்படும் போலிப் பிரசாரங்களைப் புறக்கணிப்பதாக, அங்கு கூடியிருந்தவர்கள் குறிப்பிட்டனர்.
முழு உலகமும் பெரும் பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொண்டுள்ள இத்தருணத்தில், இலங்கையானது படிப்படியாக முன்னோக்கி நகர்ந்து வருகின்றது என்றும் எடுத்துரைத்தனர்.
ஜனாதிபதியால் ஆரம்பிக்கப்பட்ட புதிய விவசாயப் புரட்சிக்கு, அந்தத் துறைகளில் முழுநேரம் வேலை செய்யும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோரின் ஆதரவை, தேவைப்படும் எந்நேரத்திலும் வழங்கத் தயாராக இருப்பதாகத் துறைசார் நிபுணர்கள் தெரிவித்தனர்.
மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வலுக்களை நோக்கி நகர்வதற்கான தேவையை எடுத்துரைத்த நிபுணர்கள், அதற்காகப் பிரவேசிக்கும் போது எதிர்கொள்ளும் தடைகளைத் தகர்த்தெறிய, அரசாங்கத்துக்கு நிபந்தனையற்ற உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறினர்.
Post a Comment