Top News

தீர்வு இன்றேல் ஜனாதிபதியின் வீட்டை முற்றுகையிடுவோம் – சாணக்கியன் எச்சரிக்கை


- ஏ.எச்.ஏ. ஹுஸைன் -



வட பகுதி மீனவர்களின் பிரச்சனைகளுக்கு அரசாங்கம் தீர்வினை பெற்றுதர தவறினால் ஜனாதிபதி அலுவலகத்தினையோ அல்லது ஜனாதிபதியின் இல்லத்தினையோ முற்றுகையிட்டு போராட்டம் முன்னெடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று(புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்ட மீனவர்களுக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் இன்று கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீனவர்களின் போராட்டங்களுக்கு என்றும் ஆதரவாக செயற்படும் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வினைத்திறனாக செயற்பட முடியாவிட்டால் அவர் பதவி விலக வேண்டும் என நான் பலமுறை கூறிவருகின்றேன்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வினைத்திறனாக செயற்படாமையினாலேயே இன்று இலங்கை – இந்திய மீனவர்களுக்கிடையிலான போராட்டம் பூதாகரமாக மாறியுள்ளது.

தமிழக மக்கள் மத்தியில் தமிழ் மக்களுக்கு உள்ள அனுதாப உணர்வினை மாற்றும் வகையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.

அவர் அரசாங்கத்தின் கைகூலியாக செயற்படுவதனை விட்டு விட்டு மீனவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறு தீர்வினை பெற்றுதர அரசாங்கம் தவறினால் போராட்ட வடிவம் மாற்றம்பெரும், குறிப்பாக ஜனாதிபதி அலுவலகத்தினையோ அல்லது ஜனாதிபதியின் இல்லத்தினையோ முற்றுகையிட்டு போராட்டம் முன்னெடுக்கப்படும்.“ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post