ரஷ்ய - உக்ரைன் நாடுகள் இடையிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அத்தியாவசியமான விடயங்கள் தவிர்ந்து உக்ரைனுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு இலங்கையர்களுக்கு வெளிவிவகார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரேனில் உள்ள 14 மாணவர்கள் உட்பட 40 க்கும் மேற்பட்ட இலங்கையர்களின் பாதுகாப்பபை உறுதி செய்வதற்காக நெருக்கமாக பணியாற்றுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
உக்ரைனின் கீவ் நகரில் தூதரகம் இல்லை எனினும் துருக்கியின் அங்காராவில் உள்ள இலங்கை தூதரகம் உக்ரைனில் உள்ள இலங்கையர்களை கண்காணித்துவருவதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
உக்ரேனில் தற்போது 14 மாணவர்கள் உட்பட சுமார் 40 இலங்கையர்கள் இருப்பதாக அங்காராவில் உள்ள தூதரகம் தெரிவித்துள்ளது.
எனினும் 14 மாணவர்களில் ஆறு பேர் ஏற்கனவே உக்ரைனில் இருந்து தற்காலிகமாக வெளியேறிவிட்ட நிலையில் மீதமுள்ள எட்டு மாணவர்களுடன் அங்காராவில் உள்ள தூதரகம் நெருங்கிய உறவைப் பேணி வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் உக்ரேனில் உள்ள இலங்கையர்கள் அவதானமாக இருக்குமாறும் அங்காராவில் உள்ள இலங்கை தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறும் வெளிவிவகார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
ரஷ்ய - உக்ரைன் போர் பதற்றம் காரணமாக உக்ரைன் நாட்டுக்கு செல்லும் விமானங்களை பல்வேறு நாடுகள் ரத்து செய்துள்ளதோடு தமது நாட்டு தூதர்களையும் திருப்பி அழைத்துள்ளன.
அங்கு வசித்து வருபவம் தமது நாட்டு மக்களையும் உடனடியாக வெளியேற வேண்டும் என அமெரிக்கா, இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் அறிவுறுத்தி உள்ளன.
Post a Comment