மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம்; கோறளைப்பற்று மேற்கு கல்விக் கோட்டத்தில் உள்ள அறபா நகர் கிராமத்தில் புதிய பாடசாலை அமைக்கப்படவுள்ளது.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
இது கோறளைப்பற்று மேற்கு கல்விக் கோட்டத்தில் 27ஆவது பாடசாலையாக அமையப் பெறவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும் பிரதியமைச்சராகவுமிருந்த மறைந்த முஹைதீன் அப்துல் காதரின் பெயரைத் தாங்கிய வண்ணம் இந்தப் புதிய பாடசாலை இயங்கவுள்ளது.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ. திஸாநாயக்க 2022.02.15 திகதியிட்டு, மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு அனுப்பி வைத்துள்ள அனுமதிக் கடிதத்தில், கிழக்கு மாகாண கல்வித் திணைக்களக் கட்டமைப்புக் குழுவின் தீர்மானத்தைக் கருத்தில் கொண்டு, புதிய பாடசாலை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பாடசாலைக்கு புதிய ஆளணி வளம் அங்கீகரிக்கப்படும் வரை வலயக் கல்விப் பணிப்பாளர் உறுதிப்படுத்தியற்கமைய அதிபர் மற்றும் ஆசிரியர்கள் வழங்க வேண்டும் என்றும் அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இப்பாடசாலை ஆரம்பிப்பதற்கான சகல முயற்சிகளையும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment