Top News

விசாரணையும் தீர்ப்பும் தமிழ், சிங்கள மொழிகளில் வழங்க வேண்டும்.



சாதாரண மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் தமிழ், சிங்கள மொழிகளில் வழக்கு விசாரணையும் தீர்ப்பும் நடைபெறுமானால் சிறந்ததென்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நீதித்துறையின் திருத்தச் சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை மேற்கொண்டிருந்தாலும் நாட்டில் முன்னெடுக்க வேண்டிய முக்கியமான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும், குறிப்பாக நீதித் துறையில் பல்வேறு செயற்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

வழக்குகள் வருடக்கணக்கில் தொடர்கின்ற நிலை காணப்படுகிறது. நீதிபதிகள் ஒருதலைப்பட்சமாக செயற்படுவதாக சில விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவர்கள் நீதியின் பக்கம் சார்பாக செயற்பட்டால் அது சிறந்ததாகும்.

மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் உட்பட சாதாரண மக்களின் வழக்குகள் தொடரப்பட்டுள்ள நீதிமன்றங்களில் தமிழ், சிங்கள மொழிகளில் வழக்கு விசாரணைகள் மற்றும் தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

பெரும்பாலும் ஆங்கில மொழிகளில் தீர்ப்புகளும் விசாரணைகளும் இடம்பெறுவதால் சாதாரண மக்களுக்கு மொழி பிரச்சினை ஏற்படுகின்றது.

உச்சநீதிமன்றத்தில் பெரும்பாலும் ஆங்கில மொழியிலேயே விசாரணைகளும் தீர்ப்புகளும் இடம்பெற்றுவருகின்றன, அவ்வாறு சட்டங்கள் உள்ளதோ எமக்குத் தெரியாது என்றார்.

Post a Comment

Previous Post Next Post