Top News

நாட்டை கட்டியெழுப்ப, முன்வருமாறு ஜனாதிபதி அழைப்பு




உள்ளூர் கைத்தொழில்களில் முதலீடு செய்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உள்ளூர் தொழில் முயற்சியாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.



பல்வேறு துறைகளில் உள்ள பாரிய தொழில் முயற்சியாளர்களுடன் நேற்று (21) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அபிவிருத்திச் செயற்பாடுகளில் தனியார் துறையினரின் பங்களிப்பைக் பெறும் நோக்கில் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்நியச் செலாவணி உருவாக்கம், அரச நிதிக் கொள்கை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாடு, முதலீட்டு ஊக்குவிப்பு, ஏற்றுமதி வளர்ச்சி, புதுப்பிக்கத்தக்க வலு சக்தி, விவசாய உற்பத்தி, போதுமான உர விநியோகம் மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாடு ஆகிய துறைகள் குறித்து இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி, பசுமை விவசாயம், தொழில்நுட்ப பூங்காக்கள் உட்பட பல துறைகளில் பாரிய முதலீடுகள் மேற்கொள்வது அதிக அந்நிய செலாவணியை பெற சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு உள்ளூர் தொழில் முயற்சியாளர்கள் வழங்கிய ஆதரவைப் பாராட்டிய ஜனாதிபதி, உலகளாவிய தொற்றுநோய்க்கு முகங்கொடுத்து அரசாங்கம் தனது பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப முற்படுகையில், சில குறுகிய மனப்பான்மை கொண்டவர்களின் தவறான கருத்துகளை சீர்செய்யும் திறன் வர்த்தக சமூகத்திற்கு இருப்பதாகவும் ஜனாதிபதி இதன் போது தெரிவித்தார்.

கடந்த இரண்டு வருடங்களில் நிர்மாணத்துறையில் ஏற்பட்ட புத்துயிர் காரணமாக சீமெந்துக்கான தேவை அதிகரித்துள்ளதாகவும் இதன் காரணமாக சீமெந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இங்கு சுட்டிக்காட்டினார்.

சந்தையில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என சுட்டிக்காட்டிய அமைச்சர், மருந்துகள் தவிர்ந்த பல பொருட்களின் விலைக் கட்டுப்பாட்டை நீக்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை வியாபார சமூகம் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

நாட்டின் பொருளாதாரம் தொடர்பான பொய்ப் பிரசாரங்களால் வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புகளை இழக்க நேரிடுவதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இங்கு சுட்டிக்காட்டினார். அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் திருப்பிச் செலுத்துவதுடன் கடன் அல்லாத முதலீடுகளை ஈர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார். அரசாங்கத்தின் கோவிட் கட்டுப்பாட்டுத் திட்டத்தைப் பாராட்டிய தொழில் முயற்சியாளர்கள் அதன் காரணமாக தங்களது தொழில்கள் பாதுகாக்கப்பட்டதாக அவர்கள் கூறினர். சில நாடுகள் கொவிட் தொற்றை திறம்பட கட்டுப்படுத்த தவறியதன் காரணமாகவும் இலங்கை அதனை நல்ல முறையில் கட்டுப்படுத்தியதன் காரணமாக இலங்கைக்கு அதிகளவான வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் சுற்றுலாத் துறையில் நாடு மிகப்பெரிய மறுமலர்ச்சியைக் கண்டுள்ளது. அதன் மேம்பாட்டுக்காக சுற்றுலா துறையினரின் வசதிகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை தொழில் முயற்சியாளர்கள் குறிப்பிட்டனர்.

Post a Comment

Previous Post Next Post