Top News

225 பேரும் எமக்குத் தேவையில்லையென நாட்டு மக்கள் கூறும் நிலை என்கிறார் மைத்திரி



பாராளுமன்றத்தில் உள்ள 225 பேரும் எமக்குத் தேவையில்லையென நாட்டு மக்கள் கூறும் நிலை உருவாகியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற மறைந்த நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் அனுதாபப் பிரேரணையில் உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.


மறைந்த நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்றுள்ள அரசியல்வாதிகளுக்கு முன்மாதிரியானவர்கள் என்றும் அவர்கள் இதுபோன்ற காலத்தில் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டியவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் நேற்று, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம். எஸ். செல்லச்சாமி, க.தங்கேஸ்வரி, பெற்றி வீரக்கோன், ஜஸ்டின் கலப்பத்தி ஆகியோருக்கான அனுதாபப் பிரேரணை நடைபெற்றது.


இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி; சட்டத்தரணியான பெற்றி வீரக்கோன் சிறந்த அரசியல்வாதி மட்டுமன்றி சிறந்த மக்கள் சேவையாளருமாவார். சட்டத்துறை, தொழிற்சங்க துறை, அரசியல் மற்றும் சமூகத் துறைகளில் அகலக்கால் பதித்து மக்களுக்கு சிறந்த சேவை செய்தவர்.


அதேபோன்று மறைந்த க. தங்கேஸ்வரி எனது அடுத்த மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து பிரதேச மக்களின் அபிமானத்தைப் பெற்றவர். முன் மாதிரியாக செயல்பட்ட அவர் இக்காலத்தில் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டியவர்.


அதேபோன்று தொழிற்சங்கத் துறையில் அளப்பரிய சேவை செய்தவர் எம். எஸ்.செல்லச்சாமி, சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுத்தவர். பாராளுமன்றத்திலும் வெளியிலும் முன்மாதிரியாக செயற்பட்டார். அவர் போன்றவர்கள் இன்று பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.








லோரன்ஸ் செல்வநாயகம்

Post a Comment

Previous Post Next Post