தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் 30 வருடங்களில் செய்ய முடியாததை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இரண்டே வருடங்களில் செய்துவிட்டதாக தெரிவிக்கும் நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன், காணி உரிமை என்பது மலையக மக்களுக்கு எட்டாக்கனி எனவும் தெரிவித்தார்.
காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழான 2251/48, 2262/50 மற்றும் 2266/5 இலக்க வர்த்தமானப் பத்திரிகையின் கீழ் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் மீதான நேற்றைய (23) விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், சிங்களவர்கள், வட,கிழக்கு தமிழர்கள், முஸ்லிம் உள்ளிட்ட மக்களுக்கு இந்நாட்டில் காணிகள் உள்ளன. ஆனால் மலையக மக்களுக்கு காணிகள் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது என்றார்.
தொழிலாளர்கள், தொழில் இருந்து ஓய்வு பெற்றதன் பின்னர் வாழ்வதற்கென ஒரு வீடு அவர்களுக்கு இல்லை. அவர்கள் வீதிகளில் நிற்கும் நிலையே காணப்படுகிறது. வாக்குரிமை இல்லாத காலத்திலும் வாக்குரிமை பெற்றப் பின்னரும் மலையக மக்களுக்கு காணி உரிமைகள் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
மாகாணசபைகளை முதலில் அமைத்து அதன் ஊடாக காணி பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும் தெரிவித்த அவர், முப்பது வருடங்கள் யுத்தம் செய்தும் நாட்டை பிரபாகரனால் அழிக்க முடியவில்லை. ஆனால் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ பதவியேற்ற இரண்டே வருடங்களில் நாட்டை அவர் அழித்துவிட்டார் என்பதுபோல ஒரு கேலிசித்திரத்தை தான் பார்த்ததாகவும் தெரிவித்தார்.
Post a Comment