நிட்டம்புவ, ஹொரகொல்ல எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், 29 வயது மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவர், முச்சக்கர வண்டி சாரதி ஒருவரால் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (20) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த இருவரும் எரிபொருளை பெறுவதற்காக வந்துள்ள நிலையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதன் பின்னர் எரிபொருளை பெற்றுக் கொண்ட முச்சக்கர வண்டி சாரதி முன்னால் சென்று நின்றுள்ளதோடு அதனைத் தொடர்ந்து எரிபொருளை பெற்று வந்த மோட்டார் சைக்கிள் சாரதியை, குறித்த முச்சக்கர வண்டி சாரதி கூரிய ஆயுதத்தால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து காயமடைந்த நபர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இவ்வாறு மரணமடைந்தவர், கொழும்பு 14 (கிராண்ட்பாஸ்) பிரதேசத்தைச் சேர்ந்த நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலம் தற்போது வத்துபிட்டிவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டி சாரதியை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளில் நிட்டம்புவ பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை நேற்று (20) மற்றும் நேற்று முன்தினம் (19) ஆகிய இரு தினங்களில் எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் நின்ற 70 மற்றும் 71 வயதான இருவர் மயக்கமுற்றதைத் தொடர்ந்து மரணமடைந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment