Top News

நாட்டுக்காக மத்திய கிழக்கு நாடுகளுடன் பேச நாம் தயார் - ஹாபிஸ் நஸீர் அஹமட்


எமது நாட்டுக்காக மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஐந்து அல்லது ஆறு பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடாகப் பெறும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் முயற்சியில் இறங்க நாம் தயாராக உள்ளோம் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தலைமையில் நடைபெற்ற சர்வகட்சி மகாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், அரசாங்கம் மக்களுக்கு வெளிப்படுத்தியதனை விடவும் நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி மோசமானது.



தற்சமயம் நாடு எதிர்நோக்கும் நெருக்கடியை விரைவாகத் தீர்க்கும் நோக்கில் ஒரு இடைக்காலத் தீர்வாக நன்கு ஆலோசித்து எடுக்கப்பட்ட தீர்வை உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம்.

அரசு ஒரு பில்லியன் டொலர்களை கடுமையான நிபந்தனைகளின் கீழ் அண்டைய நட்பு நாடுகளிடமிருந்து பெற முனைவதுடன் இலகுவாக ஐந்து அல்லது ஆறு பில்லியன் டொலர்களை திரட்டக்கூடிய வழி வகைகளில் நம்பிக்கை வைக்கத் தவறியுள்ளது. இத்தொகையை இலகுவாகப் பெறக்கூடிய எண்ணெய் வளம் பொருந்திய மத்திய கிழக்கு நாடுகளின் உதவியை அரசு உரிய முறையில் நாடவில்லை என்பது கவலைக்கிடமானதாகும்.

தேசத்தின் நன்மையைக் கருத்தில் கொண்டு மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இலக்குத் தொகையான ஐந்து அல்லது ஆறு பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடாகப் பெறும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் முயற்சியில் இறங்க நாம் தயாராக உள்ளோம். வருடாந்தம் 7 பில்லியன் அளவு நிகர வருமானம் இந்த நாடுகளில் தொழில் புரியும் ஊழியர்களின் ஊடாக நமக்கு கிடைக்கின்றது.

இன்றைய ஆட்சியாளர்கள் உதவிக்கரம் நீட்டுகின்ற நாடுகளின் நிபந்தனைகளின் பாதகம் குறித்துக் கவனம் செலுத்த முடியாத நிலைக்கு ஓரம் கட்டப்பட்டுள்ளனர். எமது கோரிக்கை இலங்கையர்கள் அனைவரும் சரி சமமானவர்களாக மதிக்கப்படவேண்டும் என்பதாகும். எமது நாடு பல்லின, பன்மத, பல் கலாசார, பன் மொழி நாடாக தொடர வேண்டும்.

அரசியலமைப்புச் சட்டத்தில் பௌத்த மதத்துக்கு அளிக்கப்பட்டுள்ள முதன்மை நிலையைக் கேள்விக்கு உட்படுத்த எவரும் முன்வரவில்லை. எனினும், மக்களைப் பிளவு படுத்தக் கூடிய வெறுப்புணர்வுப்பேச்சுக்கள், இன ரீதியான செயற்பாடுகள் அனைத்தும் கைவிடப்படவேண்டும் என்றார்.

Post a Comment

Previous Post Next Post