- எஸ்.கணேசன் -
இலங்கையில் மிக விரைவில் சோமாலியாவைப் போல பஞ்சம் ஏற்படலாம். அதனை சந்திப்பதற்கு நாம் தயாராக வேண்டும். அரசாங்கத்தின் தீர்க்கதரிசனமற்ற செயற்பாடுகளால் இந்நிலை ஏற்பட்டிருக்கின்றது என நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
மலையக மக்கள் முன்னணியின் மகளிர் தின விழா இன்று (20) பதுளையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், இன்றைய சூழ்நிலையில் இலங்கையில் பெரும் பாதிப்பை சந்தித்திருப்பவர்கள் பெண்களே. அவர்கள் ஏற்கனவே குடும்ப தலைவிகளாக செயற்பட்டு வருகின்ற நிலையில் இந்த பொருளாதார பின்னடைவு காரணமாக பெரும் பாதிப்பை அவர்கள் சந்தித்திருக்கின்றார்கள் என்றார்.
பெண்களுடைய பால் நிலை சமத்துவத்தை நாம் பேசிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இன்று அந்த சமத்துவம் இருக்கின்றதா? என்ற கேள்வி எழுகின்றது எனவும் தெரிவித்த அவர், வெறுமனே சர்வதேச தினத்தில் பெண்களை கொண்டாடுவதால் மாத்திரம் பெண்களின் உரிமைகளை பெற்று விட முடியாது. அரசியலில் 25 வீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்ற நிலை இருக்கின்றது.ஆனால் அது உள்ளுராட்சி தேர்தல்களில் மாத்திரமே அது நடைமுறையில் இருக்கின்றது. பாராளுமன்றத்தில் அந்த நிலை இல்லை. அதனை கொண்டுவர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக மலையக மக்கள் முன்னணின் உறுப்பினர் ஒருவர் வெற்றி பெறுவார். அதற்கான முழு ஒத்துழைப்பையும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் ஆகியோர் எமக்கு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment