Top News

பதவி விலகுமாறு ஜனாதிபதி ஒருபோதும் குறிப்பிடவில்லை - இலங்கை மத்திய வங்கி ஆளுநர்



(இராஜதுரை ஹஷான்)


சர்வதேச நாணய நிதியம் முன்வைக்கும் நிபந்தனைகளின் அனுகூலம் மற்றும் பிரதிகூலம் குறித்து முழுமையாக ஆராயப்படும். பதவி விலகுமாறு ஜனாதிபதி ஒருபோதும் குறிப்பிடவில்லை. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண குறுகிய மற்றும் நீண்ட கால கொள்கைத் திட்டத்தை செயற்படுத்த ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.


சர்வதேச நாணய நிதியத்தை நாட முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள விடயம் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை முழுமையாக பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.


சர்வதேச நாணய நிதியத்தில் இலங்கை ஒரு உறுப்பு நாடாக உள்ளது. நிதியமைச்சர் இலங்கையின் பொருளாதார நிலைமை, பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை எதிர்வரும் மாதம் சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்கவுள்ளார்.


சர்வதேச நாணய நிதியம் முன்வைக்கும் நிபந்தனைகளில் உள்ள சாதக மற்றும் பாதக காரணிகள் குறித்து முழுமையாக ஆராயப்படும். சாதக காரணிகளை அடிப்படையாகக் கொண்டு நாணய நிதியத்துடன் இணக்கமாக செயற்படுவோம் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்தி அடிப்படையற்றதாகும். மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் தொடர்ந்து செயற்படுவேன். மத்திய வங்கியை தொடர்புப்படுத்தி அரசியல் மட்டத்தில் குறிப்பிடப்படும் விடயங்கள் வெறுக்கத்தக்கவையாகும்.


பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்காக கடந்த ஒக்டோபர் மாதம் முன்வைத்த குறுகிய மற்றும் நடுத்தரகால கொள்கைத் திட்டத்தை செயற்படுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். பொருளாதார ஆலோசனை சபையினரது ஆலோசனைக்கமைய பொருளாதார ரீதியிலான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

Post a Comment

Previous Post Next Post