(இராஜதுரை ஹஷான்)
ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்திய 69 இலட்சம் மக்களும் தற்போது அரசாங்கத்தை கடுமையாக சபிக்கிறார்கள். நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ 6 மாத காலத்திற்காகவது அமைச்சு பதவியில் இருந்து விலக வேண்டும். மகாசங்கத்தினரால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவும் முடியும், ஆட்சியை வீழ்த்தவும் முடியும் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
அபயராம விகாரையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், நாடு பாரிய பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளது. நடுத்தர மக்கள் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ நிதியமைச்சராக பதவி வகித்ததன் பின்னரே நாட்டின் பொருளாதாரம் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளதாக நாட்டு மக்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.
அரசாங்கத்தை மாத்திரமல்ல அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்த 69 இலட்சம் மக்களையும், ஆட்சி மாற்றத்திற்காக முன்னின்று செயற்பட்டவர்களையும் ஒட்டு மொத்த மக்களும் தற்போது சபிக்கிறார்கள். ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்திய எம்மை நோக்கி 'மதகுருவே தற்போது சுகமா' எனவும் மக்கள் நகைக்கிறார்கள்.
மகாசங்கத்தினரால் அரசாங்கத்தை ஸ்தாபிக்கவும் முடியும், ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தவும் முடியும். நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ அமைச்சு பதவி வகித்ததன் பின்னர்தான் பொருளாதாரம் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளதாக நாட்டு மக்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வரை நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆறு மாத காலத்திற்காகவாவது அமைச்சு பதவியில் இருந்து விலக வேண்டும்.
நாட்டு மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். அரச நிர்வாகத்தில் காணப்படும் தவறை திருத்திக் கொண்டால் முன்னோக்கி செல்லலாம் என்பதை ஜனாதிபதிக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.
Post a Comment