நாடு எதிர்நோக்கி இருக்கும் நெருக்கடி நிலைமையில் இருந்து எவ்வாறு மீட்பது என்பது தொடர்பிலான வேலைத்திட்டங்கள் அடங்கிய தேசிய கொள்கை பிரகடனம் நேற்று (02) வெளியிட்டு வைக்கப்பட்டது. இதில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளில் 11 கட்சிகள் ஒன்றாக இணைந்து, பிரகடனத்தை வெளிட்டன.
இதில், முன்னாள் ஜனாபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்துகொண்டார். அத்துடன், அமைச்சர்களான திஸ்ஸ விதாரண, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர். அதுமட்டமன்றி தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அத்தாவுல்லாவும் பங்கேற்றிருந்தார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மொஹான் இம்பீரியல் ஹோட்டலில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அமைச்சர் விமல் வீரவன்ச தொடர்ந்து உரையாற்றுகையில்,
வீதிகள் கார்பட் செய்யப்படுகின்றன. கார்பட் செய்யப்பட்ட வீதிகளுக்கு மேலே கார்பட் செய்யப்படுகின்றன. எதற்கெடுத்தாலும் மக்கள் வரிசையில் நிற்கின்றனர். மின்வெட்டு அமுலில் இருக்கிறது. எரிபொருளுக்காக மக்கள் வரிசையில் நிற்கின்றனர். இந்த அரசாங்கத்தில் முகாமைத்துவம் இன்மை என்பது விளங்கிவிட்டது என்றார்.
கையிருப்பில் உள்ள டொலர்களை கொண்டு அத்தியாவசி தேவைகளுக்கான பொருட்களை கொள்வனவு செய்யலாம். ஆனால், பொருளாதார நிர்வாகம் முகாமைத்துவம் செய்யப்படவில்லை. தனக்குத்தான் எல்லாம் தெரியுமென்ற நினைப்பில் மற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்காமல் தீர்மானங்களை எடுப்பதால், பொருளாதாரம் சரிந்துவிட்டது.
ஆலோசனைகளை பெற்று, அதிகாரிகளின் ஆலோசனைகளின் ஊடாக முன்னகர்த்தவேண்டும். கையில் திட்டங்களை வைத்துக்கொண்டு உலக நாடுகளின் கடன்களைக் கேட்கலாம். திட்டங்கள் எதுவுமே இல்லாமல் பயணிக்க முடியாது.
எங்களிடம் இரட்டை பிரஜைவுரிமை இல்லை. எங்களுக்கு இரு நாடுகள் இல்லை. இங்குதான் இருகின்றோம். இங்குதான் இறப்போம். இந்த மண்ணிலேயே நாங்கள் வாழுவோம் எனத் தெரிவித்த விமல் வீரவன்ச கறுப்பு பணம் நாட்டுக்குள் வருவதை மேம்படுத்தும் நிதியமைச்சர் பற்றி உலகிலேயே நான் கேள்விப்படவில்லை. வங்கிகளின் ஊடாக வரும் டொலர்களை விடவும், உண்டியல்களின் ஊடாக நாட்டுக்குள் வரும் டொலர்கள் அதிகம். இது, பொருளாதாரத்தை சீர்குலைக்கும் அதனை மேம்படுத்தும் நிதியமைச்சர் இருக்கின்றார் என்றார்.
Post a Comment