Top News

சர்வ கட்சி மாநாடு : முஸ்லிம் கட்சிகளின் புறக்கணிப்பு சரியானதா…?







இன்று சர்வ கட்சி மாநாடு நடைபெற்றிருந்தது. இம் மாநாட்டை பெரும்பான்மையான எதிர்க்கட்சிகள், அரசின் பங்காளி கட்சிகள் புறக்கணித்துள்ளன. இப் புறக்கணிப்பு வரிசையில் முஸ்லிம்களின் பிரதான கட்சிகள் இரண்டும் உள்ளன. இலங்கை முஸ்லிம் அரசியலை மிக நிதானமான பாதையில் நகர்த்த வேண்டிய தேவை கட்சி தலைவர்களுக்கு உள்ளதை யாரும் மறுக்க முடியாது.

இச் சந்தர்ப்பத்தில் அரசோடு இணைந்து, நாட்டு பற்றை வெளிப்படுத்தலாமே என்ற வினாவை சிலர் எழுப்புவதை அவதானிக்க முடிகிறது. அப்படியானால், பெரும்பான்மையான எதிர்க்கட்சிகள், பெரும்பான்மையான அரசின் பங்காளி கட்சிகள் நாட்டு பற்றற்றவையா என்ற வினா எழுகிறது. அதிகமான கட்சிகள் புறக்கணிப்பை செய்துள்ளதால் இதில் முஸ்லிம் கட்சிகளை நோக்கி யாருடைய பார்வையும் செல்ல வாய்ப்பில்லை. இவர்கள் கலந்து கொண்டிருந்தாலே, அது வேறு கோணம் எடுத்திருக்கும்.

இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஒப்பந்தங்களை செய்து, முஸ்லிம் கட்சிகள் சாதிக்கலாமே என்று ஒரு ஆக்கம் படித்தேன். சர்வ கட்சி மாநாடு செல்ல ஒப்பந்தம் செய்ய கூறும் அறிவாளியை என்னவென்று சொல்வது? சர்வ கட்சி மாநாட்டில் ஒப்பந்தங்கள் செய்தாவது முஸ்லிம் கட்சிகளை கலந்துகொள்ளச் செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் அரசுக்கில்லை. அவர்கள் கலந்துகொள்வதும், கலந்துகொள்ளாமல் விடுவதும் ஒன்றே! இம் மாநாடு பிரதான எதிர்க்கட்சிகளை மையப்படுத்திய அரசியல் நகர்வென்பது சிறு பிள்ளையும் அறியும்.

இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அரசுடனான உறவை பலப்படுத்தலாமே! கேள்விகள் வெளிப்பார்வையில் நியாயமானதாக தோன்றலாம். தற்போதைய அரசு தோற்றம் பெற்றது தொடக்கம் இவ்வளவு காலமும் எதிர்க்ட்சி அரசியலை தொடரும் பிரதான இரண்டு முஸ்லிம் கட்சிகளும், பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணித்திருக்கும் நிலையில், மீட்க முடியாதளவு தோல்வியடைந்துள்ள அரசின் அழைப்பை ஏற்பது பொருத்தமான தீர்மானமாக அமையாது. அரசு வெற்றிப் பாதையில் பயணித்தால், சந்தர்ப்பம் பார்த்து இணைந்து செல்வதை பொருத்தமான நகர்வாக கூறலாம்.

த.தே.கூ சென்றுள்ளதே, ஏன் முஸ்லிம் கட்சிகளால் முடியாது என்ற வினா ஆழமானது. தமிழ் கட்சிகளிடம் இருக்கும் பலம் எம்மிடமில்லை என்பது வெளிப்படையானது. மு.காவில் 5 பா.உறுப்பினர்களும், அ.இ.ம.காவில் 4 பா.உறுப்பினர்களும் தெரிவாகி இருந்தனர். தற்போது தலைவர்கள் இருவரையும் தவிர ஏனைய அனைவரும் மொட்டுவுடன் உறவில் உள்ளனர். தலைவர்கள் தனித்து பலமிழந்துள்ளனர். த.தே.கூவை போல நிமிர்ந்து செயற்பட இவர்களிடம் பாராளுமன்ற பலமில்லை. இதனை ஏற்படுத்தியவர்கள் 20ஐ ஆதரித்த ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களே!

அரசியலில் தூர நோக்கு சிந்தனை மிக அவசியமானது. இன்று நடைபெற்ற சர்வ கட்சி மாநாட்டை இலங்கை மக்கள் யாருமே தீர்வை நோக்கிய ஒரு மாநாடாக கருதவில்லை. இன்னும் சொல்லப் போனால் மொட்டுவின் ஏமாற்று அரசியலின் ஒரு பாகமாகவே கருதுகின்றனர். தலைவர்களை தவிர மு.கா மற்றும் அ.இ.ம.கா பா.உறுப்பினர்கள் மொட்டுவின் காலில் விழுந்து கிடக்கின்றனர். இந் நிலையில் முஸ்லிம் தலைவர்களும் இந் நிகழ்வில் கலந்துகொண்டால், அது நோக்கப்படும் கோணம் மிக இழிவாக அமையும். முஸ்லிம் கட்சிகள் பதவிகளுக்கு ஆசைப்பட்டு மொட்டோடு இணைந்துள்ளார்கள் என்ற தோற்றத்தை எடுக்கலாம். முஸ்லிம் கட்சிகள் சுயாதீனமாக செயற்பட முடியாமைக்கு 20ஐ ஆதரித்து எமது முஸ்லிம் பா.உறுப்பினர்கள் பிரதான காரணமாகும்.

அரசின் சர்வ கட்சி மாநாடு தோல்வியடையாமல் இருக்க கட்சிகள் ல கலந்துகொண்டதான விம்பம் தோற்றுவிக்கப்படல் அவசியமானது. அந்த வகையில் மு.கா மற்றும் அ.இ.ம.கா ஆகிய கட்சிகளின் பா.உறுப்பினர் கலந்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்குள்ளது. அரசுக்கு அஞ்சி இவர்கள் கலந்துகொண்டால், இவர்களை முஸ்லிம் சமூகம் வறுத்தெடுக்கும் என்பதை இவர்கள் நன்கறிவார்கள். இதற்குள் இரு முஸ்லிம் கட்சி தலைவர்களையும் இழுத்துவிட்டால் ஓரளவு தப்பிக்கலாம். இவர்களின் வலைக்குள் முஸ்லிம் கட்சி தலைவர்கள் சிக்கவில்லை. தங்களின் இத் திட்டம் தோற்க, இம் மாநாட்டில், தாங்கள் நாட்டை காப்பாற்றும் தியாகிகளாக கலந்து கொண்டது போன்றும், இதுவே முஸ்லிம்களுக்கான சரியான நகர்வு போன்றும் சில காகங்கள் கரைகின்றன. இவர்கள் கரைவது எதற்கென்பதை மக்கள் நன்கறிவார்கள்.

இம் மாநாட்டை முஸ்லிம் கட்சிகள் புறக்கணித்தமையே சரியான நகர்வாகும். அரசுக்கு கூஜா தூக்கும் சிலர், தங்களது இழிவான செயலை நியாயப்படுத்த முஸ்லிம் கட்சி தலைவர்களை நோக்கி விரல் சுட்டுகின்றனர்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.

Post a Comment

Previous Post Next Post