அழிக்கப்பட்ட விடுதலைப்புலிகளை முன்வைத்து இன்னமும் எவ்வளவு காலத்துக்கு அரசியலை முன்னெடுக்கப்போகின்றீர்கள்? என்று நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச, முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரிடம் கேள்வி எழுப்பியுள்ளார், அவர்களை இனவாதிகள் என்றும் பசில் சாடியுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் அரசின் அதிருப்திக் குழு கட்சிகளின் தலைவர்கள் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்தனர்.
இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த கம்மன்பில, ‘விடுதலைப் புலிகள் ஆயுதத்தால் பெற முடியாததைக் கூட்டமைப்பு டொலரை முன்னிறுத்திப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றது. அதனால்தான் சர்வகட்சி கூட்டத்தில் கலந்து கொண்டது’ என்று குறிப்பிட்டார். இது தொடர்பில் ஊடகங்கள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் கேட்டபோது,
“கம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோர் இனவாதத்தை முன்வைத்துத்தான் தமது அரசியலை நடத்தி வருகின்றார்கள். அரசுக்குள்ளிருந்தும் இனவாதக் கருத்துக்களை வெளியிட்டார்கள். இதனால் அரசு பெரும் அவப்பெயரைச் சந்தித்தது. தற்போது அரசுக்கு வெளியில் சென்றும் இனவாதக் கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்கள். இவர்களின் இந்தக் கருத்துக்கள் ஜனாதிபதி ஆரம்பித்துள்ள கூட்டமைப்புடனான பேச்சுக்கு எந்த விதத்திலும் தடங்கலை ஏற்படுத்தாது. அதேவேளை, தமிழ் – சிங்கள உறவிலும் பாதிப்பு ஏற்படுத்தாது.
அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளை முன்வைத்து கம்மன்பில முன்வைத்து எத்தனை நாளைக்குத்தான் அரசியலை முன்னெடுக்கப்போகின்றார்கள்? சர்வகட்சி மாநாட்டிலும், ஜனாதிபதியுடனான பேச்சிலும் கூட்டமைப்பினர் பங்கேற்றமையை வரவேற்கின்றேன்.
ஜனாதிபதி தலைமையிலான அரசு கூட்டமைப்புடனான பேச்சுக்களைத் தொடர்ந்து முன்னெடுத்து, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை வழங்கும்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment