இலங்கை வரலாற்றில் முதன்முறையாக பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச, மாலைதீவில் நீர் விளையாட்டுகளில் ஈடுபட்ட காணொளி வெளியாகியுள்ளது.
இதனையடுத்து அமைச்சர் நாமல் ராஜபக்சவிற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமையினை அவதானிக்க முடிகின்றது.
மாலைத்தீவிலுள்ள நீர் விளையாட்டுகளின் பயிற்றுவிப்பாளர் ஒருவர், நாமல் ராஜபக்சவின் புகைப்படத்தை வெளியிட்டு, இலங்கை அமைச்சருக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடியால் அடிப்படை வசதிகள் இன்றி இலங்கையர்கள் தவித்து வரும் நிலையில், நாமல் ராஜபக்ச மாலைதீவுக்கு விஜயம் செய்ததன் நோக்கம் என்ன என சமூக ஊடகங்களில் பல இலங்கையர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த நிலையில் மாலைதீவு விளையாட்டு துறை அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொள்ளும் நோக்கிலேயே அங்கு சென்றுள்ளதாக நாமல் ராஜபக்ஷ, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
தனது மாலைதீவுக்கான விஜயம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “மாலைதீவு விளையாட்டு அமைச்சர் நடத்தும் தேசிய விளையாட்டு விருது வழங்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காகவே ஒருநாள் பயணமாக மாலைதீவிற்கு சென்றுள்ளேன்.
மாலைத்தீவு இலங்கையின் நெருங்கிய நண்பன் என்பதாலும், விளையாட்டு மற்றும் இளைஞர்களில் எங்களுக்கு நல்ல புரிதல் இருப்பதாலும், கடந்த ஒன்றரை வருடங்களில் பல பரிமாற்றங்கள் நடந்துள்ளதாலும், எதிர்காலத்தில் இன்னும் பல பரிமாற்றங்கள் நடைபெறவுள்ளமையினாலும் இந்த விஜயம் முக்கியமானது.
எனது இந்த மாலைதீவிற்கான விஜயத்தினால் இலங்கை அரசாங்கத்திற்கு எந்த செலவும் இல்லை. மறைந்து கொண்டு நெருக்கடியை எதிர்கொள்ள முடியாது. மாலைதீவில் அதிக வேலைவாய்ப்புகளைப் பெற வேண்டும், இலங்கை மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கு மாலைததீவுகள் அதிகளவான தொழில் வாய்ப்புகளை வழங்குகின்றன.
மக்களின் விரக்தியை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால் இந்த சூழ்நிலையிலிருந்து வெளியேற நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.“ எனத் தெரிவித்துள்ளார்.
மாலைதீவில் நீர் விளையாட்டில் குதூகலிக்கும் நாமல்(காணொளி இணைப்பு)
Post a Comment