Top News

மறுசீரமைப்புக்களில் பலவற்றை நாம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளோம் - இலங்கை மத்திய வங்கி சர்வதேச நாணய நிதியத்திற்கு விளக்கம்



(நா.தனுஜா)


சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறான கொள்கை ரீதியான மறுசீரமைப்புக்களில் பலவற்றை நிதியமைச்சுடன் இணைந்து தாம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தியிருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


இலங்கைக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி விஜயம் மேற்கொண்டிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவினால் கண்டறியப்பட்ட விடயங்கள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய 95 பக்க அறிக்கை நேற்றுமுன்தினம் பகிரங்கப்படுத்தப்பட்டது.


அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி மத்திய வங்கியினால் நேற்றையதினம் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பான அதன் மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த மதிப்பீட்டுச் செயன்முறையானது கடந்த 2021 ஆம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு நிதியமைச்சு, மத்திய வங்கி, பல்வேறு அரச கட்டமைப்புக்கள், நிதிக் கட்டமைப்புக்கள், தனியார் அமைப்புக்கள், தனி நபர்கள் உள்ளிட்ட பல்வேறுபட்ட தரப்பினருடனும் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தமை, அவர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை அலுவலகத்திற்குத் திரும்பியதன் பின்னர் மேலதிக தெளிவுபடுத்தல்கள் கோரப்பட்டமை, குறித்த மதிப்பீட்டு அறிக்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையினால் ஆராயப்பட்டமை, அதன் முடிவில் பணிப்பாளர் சபையினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டமை, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று ஜனாதிபதியை சந்திப்பதற்காக நாட்டிற்கு வருகை தந்தமை, இலங்கை அதிகாரிகளால் இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டமை, சர்வதேச நாணய நிதியத்தின் இறுதி அறிக்கை 25 ஆம் திகதி வெளியிடப்பட்டமை ஆகிய விடயங்களை உள்ளடக்கியுள்ளது.


அதேவேளை நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கியினால் ஏற்கனவே பல்வேறு கொள்கை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


கடந்த 2021 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திலிருந்து நாணயக் கொள்கை இறுக்கமாக்கப்பட்டமை, நாணயமாற்று வீதம் தளர்த்தப்பட்டமை, வெளிநாட்டு நாணயமாற்றுச் சந்தை தொடர்பான வரையறைகளை நீக்குதல், வருமானத்தை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை அமுல்படுத்தல், முக்கிய பொருட்களுக்கு சந்தையை மையப்படுத்திய விலை மாறுதல்களுக்கு இடமளித்தல் ஆகியனவும் அதில் உள்ளடங்குகின்றன.


அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் நெருங்கிச் செயற்படுவதற்கான முனைப்பைக் காண்பிக்கும் நிலையில், அத்தகைய தொடர்புகளைப் பேணுவதற்கு அவசியமான முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு மத்திய வங்கி தயாராக இருக்கின்றது என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post