” அசிங்கமான அமெரிக்கரான பஸில் ராஜபக்சவை அமெரிக்கா விரட்டும்வரை எமது போராட்டம் ஓயாது. எம்மை சிறையில் அடைத்தால்கூட இதற்கான நடவடிக்கை நிறுத்தப்படமாட்டாது.” – என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
பிவிதுரு ஹெல உறுமய கட்சியில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நான் வலுசக்தி அமைச்சராக பதவி வகித்தபோது, ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பரிந்துரைக்கமைய டீசல் விலையை 7 ரூபாவால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தேன். இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு, தன்னை பதவி விலகுமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் வலியுறுத்தினார். ஆனால் இன்று டீசல் விலை 55 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது சாகர காரியவசம் என்ன செய்ய போகின்றார்?
டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என நான் முன்கூட்டியே அறிவித்தால்தான் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது என அமைச்சர்கள் கூறுகின்றனர். அப்படியானால் மருந்து, கோதுமை மா, சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கு எப்படி தட்டுப்பாடு ஏற்பட்டது? டொலர் பிரச்சினையே இதற்கு மூலக்காரணம். நிதி அமைச்சர், அந்நிய செலாவணி கையிருப்பை முறையாக முகாமை செய்யாததாலேயே டொலர் பிரச்சினை ஏற்பட்டது. எனவே, தனது இயலாமையை மூடிமறைக்க எம்மீது குற்றஞ்சாட்ட வேண்டாம் என பஸில் ராஜபக்சவிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
அதேவேளை, எம்மை நீக்கிவிட்டு ,நாம் கூறிய விடயங்களை தற்போது அவசர அவசரமாக நிறைவேற்றிவருகின்றனர். ஒரு பணன்டோல் மாத்திரையால் குணப்படுத்தக்கூடிய நோயை, நிதி அமைச்சர் மரணம்வரை அழைத்தச்சென்றுள்ளார். இப்போதுதான் பணன்டோல் கொடுக்க முற்படுகின்றார். நாம் அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை மீறவில்லை. அரசுக்குள் கலந்துரையாடி பயன் இல்லை என்பதால்தான் மக்கள் மத்திக்கு வந்தோம்.
எமக்கு எதிராக வழக்கு தொடுக்கலாம். சிறையில் அடைக்கலாம். ஆனாலும் நாம் பின்வாங்கமாட்டோம். அசிங்கமான அமெரிக்கரான பஸிலை அமெரிக்க விரட்டும்வரை எமது போராட்டம் ஓயாது.” – என்றார். கம்மன்பில.
Post a Comment