ஒரு சில ஹஜ் முகவர்கள் இவ்வருட ஹஜ் கோட்டா கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறி ஹஜ் கடமைக்கு திட்டமிட்டுள்ளவர்களிடம் ஹஜ் யாத்திரைக்காக முற்பணம் கோரிவருவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள அரச ஹஜ் குழு எவருக்கும் முற்பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வருட ஹஜ் ஏற்பாடுகளுக்காக இதுவரை சவூதி அரேபிய ஹஜ் அமைச்சு இலங்கையைத் தொடர்பு கொள்ளவில்லை.
ஹஜ் கோட்டா தொடர்பில் ரமழானிலே சவூதி ஹஜ் அமைச்சு தீர்மானங்களை மேற்கொள்ளும் இந்நிலையில் ஹஜ் யாத்திரைக்குத் திட்டமிட்டுள்ளவர்கள் அரச ஹஜ் குழுவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு கிடைக்கும் வரை பொறுமையாக இருக்குமாறு அரச ஹஜ் குழுவின் தலைவர் அஹ்கம் உவைஸ் பொதுமக்களைக் கோரியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், ‘இவ்வருட ஹஜ் யாத்திரை ஏற்பாடுகளுக்கென ஹஜ் முகவர்கள் உத்தியோகபூர்வமாக அரச ஹஜ் குழு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நியமிக்கப்படவில்லை.
அவர்களுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை.
நாடு பொருளாதார ரீதியில் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் ஹஜ் கடமைக்கான அனுமதி கிடைக்குமா என்பதும் சந்தேகத்திற்கிடமாகவுள்ளது. எனவே பொதுமக்கள் ஒரு சில ஹஜ் முகவர்களின் உறுதிமொழிகளை நம்பி முற்பணம் செலுத்த வேண்டாம் என தெரிவித்துக் கொள்கிறோம்.
அவ்வாறு முற்பணம் செலுத்தப்பட்டால் அதற்கு அரச ஹஜ் குழுவோ, திணைக்களமோ பொறுப்பாக மாட்டாது எனவும் அவர் கூறினார்.–
Vidivelli
Post a Comment