Top News

’பங்காளிகள் போனாலும் பாதிப்பில்லை’





க. அகரன்

பங்காளிக் கட்சிகளின் அமைச்சர்கள் வெளியேற்றப்பட்டு அமைச்சு மாற்றங்கள் இடம்பெற்றமை அரசாங்கத்துக்கு பாதிப்பில்லை என, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வவுனியாவில் கட்சி உறுப்பினர்களுடன் நேற்று (06) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஐ.நா ஆணையாளரின் அறிக்கை தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “இது காலத்துக்கு காலம் வரும் அறிக்கையே. ஆனால் இங்கு எவ்வாறான நடவடிக்கைகள் உள்ளது என்பதில்தான் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்“ என தெரிவித்தார்.

இதேவேளை, அண்மையில் வவுனியாவில் உங்கள் கட்சி ரீதியாக மேற்கொள்ளப்பட்ட சம்பவமானது பலத்த விமர்சனத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் கட்சி ரீதியாக எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளீர்கள் என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியபோது,

“அவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்து வருகின்றோம். அதில் சாதக பாதிக நிலைமைகள் உள்ளது. சரியான நிலைமைகளை அறிந்து அவ்வாறான நிலைமைகள் தொடராமல் இருப்பதற்கு நாங்கள் முடிவு எடுத்துள்ளோம்“ என்றார்.

மேலும் அங்கு அவர் தெரிவிக்கையில், “நீண்ட கால இழுபறிக்கு மத்தியில் இலங்கையில் இருந்து 50 பேரும் இந்தியாவில் இருந்து 50 பேரும் கச்சதீவுக்கு போகலாம் என தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

அதன் பின்னர் ஜனாதிபதியுடன் நான் கலந்துரையாடி இரு பக்கத்தில் இருந்தும் நூறு நூறு பேராக கச்சதீவு அந்தோனியார் திருவிழாவிற்கு செல்ல ஏற்பாடு செய்திருக்கின்றேன்.

கச்சதீவுக்கு நானும் செல்வதாக உள்ளேன். ஏனெனில் இருதரப்பு கடற்றொழிலாளர்களுக்கும் இடையில் ஒரு புரிந்துணர்வையும் நட்புறவையும் ஏற்படுத்துவற்காக நானும் செல்வதாக உள்ளேன்.

இதேவேளை, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பேச்சுக்கள் தொடர்கின்றன. எதிர்வரும் 18 ஆம் 19 ஆம் திகதிகளில் இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வருகிறார்.

அப்போது அமைச்சருடனான சந்திப்பு நடைபெறும். அதற்கு முன்னராக அதிகாரிகள் மட்டத்திலான பேச்சும் இடம்பெறவுள்ளது“ என்றார்.


Post a Comment

Previous Post Next Post