(ஏ.ஆர்.ஏ.பரீல்)
‘கூரகல தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலின் இருப்புக்கு எதிராக உருவாகியுள்ள சவால்களை முஸ்லிம் சமூகம் பேச்சுவார்த்தைகள் மூலம் சமாதானமாக தீர்த்துக்கொள்ள வேண்டும். இரு தரப்பு பேச்சுவார்த்தைகளே இன்றைய சூழலில் நன்மை பயக்கும். இந்த நிலைப்பாட்டிலே நானும் இருக்கிறேன்’ என நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.
வியாழக்கிழமை நீதியமைச்சர் அலி சப்ரி கொழும்பில் தனது இல்லத்தில் தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலின் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இருதரப்பு சந்திப்பொன்றினை ஏற்பாடு செய்திருந்தார். பள்ளிவாசலுக்கு சவால் விட்டுக்கொண்டிருக்கும் நெல்லிகல வத்துகும்புரே தம்மரதன தேரரும் அழைக்கப்பட்டிருந்தார். ஜெய்லானி பள்ளிவாசல் தலைவர், நிர்வாகிகள், சூபி தரீக்கா உயர்பீட உறுப்பினர்கள், சட்டத்தரணிகள் என்போர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.
நீதியமைச்சர் இச்சந்திப்பு தொடர்பில் தொடர்ந்தும் விடிவெள்ளிக்கு கருத்து தெரிவிக்கையில், ‘பல தசாப்த காலமாக இப்பள்ளிவாசல் பிரச்சினை தொடர்கிறது. இப்பிரச்சினைக்கு சுமுக தீர்வு காணும் நோக்குடனே இச்சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தேன். இப்பிரச்சினைக்கு சட்ட ரீதியில் தீர்வு காணுவதென்றால் அதற்கு நீண்ட காலம் செல்லும். இந்தியாவில் இது போன்ற பிரச்சினையில் சட்டத்தை அணுகிய போது முஸ்லிம் சமூகத்துக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது. இங்கு இந்தியா பாபர் மஸ்ஜித் விவகாரத்தைக் குறிப்பிட்டுக் கூறலாம். எனவே நாம் சுமுகமான பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதே சிறந்தது.
பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முதற்கட்டமாக நில அளவையாளர் மற்றும் கட்டடக் கலைஞர் அடங்கிய குழுவொன்று கூரகலக்கு விஜயம் செய்து பள்ளிவாசல் பற்றி ஆராய்ந்து அறிக்கையொன்றினைச் சமர்ப்பிக்கும்படி கோரியிருக்கிறேன்.
அதன்பின்பு தொல்பொருள் திணைக்களம், புத்தசாசன மற்றும் சமய கலாசார அமைச்சு, வக்பு சபை, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் என்பனவற்றுடன் கலந்துரையாடி பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முடியும் என நினைக்கிறேன் என்றார்.
இதேவேளை நெல்லிகல வத்துகும்புரே தம்மரதன தேரர் தப்தர் ஜெய்லானியின் ஸியாரம் மற்றும் கொடி கம்பம் தவிர ஏனைய தகர கட்டமைப்பு உட்பட அனைத்தும் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. கூரகல தப்தர் ஜெய்லானி உட்பட்ட பிரதேசம் சிவனொளிபாத மலை போன்று அனைத்து இன மக்களும் விஜயம் செய்து வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் கலாசார பிரதேசமாக அமைய வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இதேவேளை நீதியமைச்சர் அலிசப்ரியினால் ஏற்பாடு செய்யப்பட்ட கட்டட கலைஞர், நில அளவையாளர் அடங்கிய நால்வர் கொண்ட குழு நேற்று மாலை கூரகலக்கு விஜயமொன்றினை மேற்கொண்டு ஜெய்லானி பள்ளிவாசலை ஆய்வு செய்தது. அக்குழு நெல்லிகல தேரரை சந்திக்கவும் ஏற்பாடாகியிருந்தது.- Vidivelli
Post a Comment