ரயில் கட்டணங்களை மறுசீரமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக போக்கு வரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து பஸ் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பஸ் சங்கங்களுடன் கலந்துரையாடி குறைந்தளவான வீதத்தில் பஸ் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
அதேபோன்று ரயில் கட்டணங்களை அதிகரிப்பதற்கும் ஆராயப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்படவில்லை. பஸ் கட்டணத்தை விடவும் மூன்றில் ஒரு பங்கு குறைவாகவே ரயில் கட்டணமாக இருக்கின்றது.
இந்நிலையில் தற்போது டீசல் விலை 50 ரூபாவினால் அதிகரித்துள்தையடுத்து ரயில்வே திணைக்களத்தினால் டீசல் செலவை ஈடுசெய்ய முடியாத நிலைமையே உள்ளது.
இதனால் ரயில் கட்டணங்களும் குறிப்பிடத்தக்க வீதத்தால் எதிர்காலத்தில் அதிகரிக்க இருக்கிறோம். அது தொடர்பான கட்டண மறுசீரமைப்புக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
15 வீதத்தினால் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு நீண்ட காலமாக ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்படாததால் அதனை ஒத்த தொகையினால் ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷம்ஸ் பாஹிம்
Post a Comment