பயங்கரவாத தடைச் சட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்படுகின்ற திருத்தங்கள், மனித உரிமைகள் மற்றும் மனித சுதந்திரத்தை இது உறுதிப்படுத்துகிறது என்று தெரிவித்த வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்றால் அதற்கு மக்கள் ஆணை அவசியம் என்றும் தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம், பராளுமன்றத்தில் நேற்று (22) இடம்பெற்றது.
அங்கு உரையாற்றியபோதே மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவித்ததாவது,
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் எவரும் அநாவசியமாக கைதுசெய்யப்படக்கூடாது என ஜனாதிபதி பாதுகாப்பு படைகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
43 ஆண்டுகளாக இப்போதும் இந்த சட்டம் நடைமுறையிலுள்ள சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் என ஒரு சிலர் கூறுகின்றனர்.
ஆனால் அதற்கு நீண்ட காலம் எடுக்கும், முதலில் நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதுடம் மக்களின் சுதந்திரமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். சட்டத்தை முழுமையாக நீக்குவது என்றாலும் அதற்கு மக்களின் கருத்துக்களை கேட்க வேண்டும்.
ஆகவே இப்போது ஏற்படுத்தப்பட்டுள்ள திருத்தங்களை அரசியல் விமர்சனங்களுக்கு அப்பால் ஆதரிக்க வேண்டும். இப்போதுள்ள திருத்தங்கள் சகலரதும் நலன்களை பாதுகாக்கும். இதற்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும்.
பயங்கரவாத தடை சட்டத்தை முழுமையாக திருத்துவதற்கு கால அவகாசம் எடுக்கும். பல்வேறு அரச நிறுவனங்களை இணைத்துக்கொண்டே இதனை செய்தாக வேண்டும். ஆனால் இப்போது அவசரமான திருத்தங்கள் தேவைப்படுகின்றன.
இது மேலோட்டமான திருத்தமென கருத வேண்டாம். இது ஆழமாக திருத்தமாகும். இந்த திருத்தங்கள் தற்போதைய சட்டத்தில் காத்திரமான மாற்றங்களை கொண்டுவரும் என்பதை உறுதியாக கூற முடியும்.
மேலும், மனித உரிமைகள் மற்றும் மனித சுதந்திரத்தை இது உறுதிப்படுத்துகின்றது. அதற்கான அவசியமான மாற்றங்களை இது உள்வாங்கியுள்ளது.
பயங்கரவாத தடை சட்டத்தின் தடுத்துவைப்பு, விசாரணைக்கு உட்படுத்தல், கைதுகள் போன்ற விடயங்களில் முக்கிய மாற்றங்களை கொண்டுவந்துள்ளன.
குறிப்பாக கைதுசெய்யப்பட்ட நபர் அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் நீதிவானிடத்தில் அறிவிக்க வேண்டும். அதேபோல் சித்திரவதைக்கு உட்படுத்தல் தடுக்கப்படும்.
உடல் ரீதியில் மட்டுமல்ல மனதளவிலும் குறித்த நபர் சித்திரவதைக்கு உற்படுதப்பட முடியாது. நீதவான ஒவ்வொரு மாதமும் குறித்த நபர் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.
அதேபோல் தடுத்து வைக்கப்பட்ட நபர் அவர் சார்பில் வழக்கறிஞர் ஒருவரை நியமிக்க முடியும், இதற்கு முன்னரும் அதற்கான ஏற்பாடுகள் இருந்தாலும் நிபந்தனைகள் அதிகமாக இருந்தது, எனினும் இப்போது அவ்வாறான நிபந்தனைகள் இல்லை.
அதேபோல் தடுத்து வைக்கப்பட்ட நபர் தனது குடும்பத்தை பார்வையிட முடியும். வாழ்க்கைத்துணையை, பிள்ளைகளை, பெற்றோரை பார்க்க அனுமதி உண்டு. ஆகவே தனிநபர் சுதந்திரம், மனித உரிமைகளை அடிப்படையாக கொண்டு நாம் இவ்வாறான திருத்தங்களை கொண்டு வருகின்றோம்.
அத்துடன் தடுத்து வைக்கப்பட்ட நபரின் கருத்தை பெற்றுக்கொள்ள முடியும், கருத்து சுதந்திரத்துக்கு அமைய அவரது நிலைப்பாடு என்ன என்பதை அறிவிக்க முடியும். அதேபோல் ஊடகவியலாளர்களின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், தடுப்புக்காவல் கால எல்லையை 18 மாதங்களில் இருந்து 12 மாதங்களுக்கு குறைத்துள்ளோம். அதேபோல் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் இருந்த 81 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு இன்று சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர் என்றார்.
Post a Comment